கொரோனாவிற்காக தனது சேமிப்பிலிருந்து 100,000 திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய 9 வயது அமீரக சிறுவன்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானை இருப்பிடமாக கொண்ட 9 வயது அமீரக சிறுவன் ஒருவர், தனது சேமிப்பிலிருந்து 100,000 திர்ஹம்ஸை கொரோனாவிற்கு எதிர்த்து போராட அமீரக அரசிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த செயலின் மூலம் தன் நாட்டின் மீது கொண்ட அவரது உண்மையான அன்பையும், தாராள மனப்பான்மையையும் கண்டு அனைவரும் பாராட்டியுள்ளனர்.
அஜ்மானில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவன் முகமது ஹமீத் அப்துல் ஹக்கீம் (Mohammed Hamid Abdul Hakeem), 2011 ஆம் ஆண்டு உடல்நல குறைவுடன் பிறந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுவனுக்கு அவசரமாக தீவிர இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்துள்ளது. அவரது குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிக்கலான இருதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகாரிகளின் உதவியுடன் அவரை வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பிறகு, முகமது நலமுடன் வீடு திரும்பி உள்ளார். தற்பொழுது முகமதுவும் மற்ற எல்லா குழந்தைகளையும் போலவே தனது குழந்தை பருவத்தை முழுமையாக அனுபவித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தனக்கு துணை நின்ற தனது நாட்டிற்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, இந்த அசாதாரண சூழ்நிலையில் கொரோனாவிற்கு எதிரான அரசின் முயற்சிகளில் தனது பங்களிப்பையும் அளிக்கும் பொருட்டு 100,000 திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது நாட்டின் தலைமையின் மீதான அவரது அன்பையும், நாட்டு மக்களின் முன்னேற்றதிற்கான அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதை பற்றி முகமது ஒரு வீடியோவில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, மற்ற குழந்தைகளைப் போலவே தானும் பள்ளிக்குச் செல்ல காரணமான தன் தாய்நாட்டிற்கும் நன்றி” என்று கூறினார். மேலும் மாண்புமிகு ஷேக் கலீஃபா மற்றும் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் ஆகியோரை சந்திக்க விரும்புவதாகவும், தனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அவர்களை மிகவும் நேசிப்பதாகவும் அவர் கூறினார்.