வளைகுடா செய்திகள்

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை தொடக்கம்..!! போர்க்கப்பல் மூலம் அழைத்துவர முயற்சிப்பதாகவும் தகவல்..!!

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வளைகுடா நாடுகளில் தவிக்கும் பெருமளவிலான இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவும், இந்திய கடற்படையும் தங்களின் விமானம் மற்றும் போர்க்கப்பல்களுடன் தயார்நிலையில் இருக்குமாறு இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவின் செய்தி நிறுவனமான ANI இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் தற்போதய சூழ்நிலையை மதிப்பிட்டும், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான திட்டதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விரிவான திட்டத்திற்காக ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் தயார்நிலையில் இருக்குமாறும் கேட்டுள்ளோம்” என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் ANI-யிடம் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“பல இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அரசாங்கமும் அவர்களுக்காக சாத்தியமான எல்லா திட்டங்களையும் செய்து, அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர். அவர்களில் பலர் துறைமுக நகரங்களில் வசித்து வருகின்றனர். அதனால்தான் கடல் வழி போக்குவரத்து வழியாகவும் இந்தியர்களை அந்தந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான விரிவான திட்டத்தை வழங்குமாறும் இந்திய கடற்படையையும் அரசாங்கம் கேட்டுள்ளது” என்றும், இந்திய கடற்படை சார்பாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த விரிவான திட்டத்தின் படி “1,500 இந்தியர்களை வளைகுடா நாடுகளில் இருந்து கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்களின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வர முடியும்” என இந்திய கடற்படை கூறியிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs,MEA), “இந்தியர்களை திருப்பி அழைத்து வருவதற்கான தேவையான ஏற்பாடுகளுக்காக நாங்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசாங்கங்களுடன் எங்கள் ஆலோசனையைத் தொடங்கியுள்ளோம். அதேபோல், இந்தியாவிற்கு திரும்பி வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்களுக்கான விரிவான அறிக்கையை தயாரிக்கவும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், “இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன, இந்திய விமான போக்குவரத்து, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான திறன் கொண்டது” என்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவிடம் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாளர்கள். எனவே அவர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது பற்றியும், அது குடிமக்களால் அல்லது மத்திய அரசால் ஏற்கப்படுமா என்பதை பற்றியும் தீர்மானிக்க விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய துணை தூதரக அதிகாரி விபுல் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் இருந்து வரக்கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் முறை குறித்து இந்திய அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும். இந்த திட்டத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்புவதில் இந்திய கடற்படையின் பங்களிப்பு பற்றி அமீரகத்தில் இருக்கும் இந்திய தூதரகம் உறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல ஆர்வமுள்ள இந்தியர்களிடமிருந்து விபரங்களை சேகரிப்பது தொடர்பான விஷயத்தில், அதிகாரப்பூர்வ செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் விபுல் கூறியுள்ளார். எனினும், சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் இந்தியர்களின் தகவல்களை சேகரிப்பதற்கு, ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் செயல்முறை பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பான மத்திய அரசின் இறுதி விளக்கங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் விமான நடவடிக்கைகள் மற்றும் பிற பயண முறைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப முடியாமல் வளைகுடா நாடுகளிலேயே சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேற்கொள்ளப்பட்ட நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவின் காரணமாக மே மாதம் 3 ம் தேதி வரையிலும் இந்தியா, நாட்டின் அனைத்து வகையான பயணங்களையும் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!