அமெரிக்காவில் ஒரே நாளில் 30,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு..!!! 1,150 பேர் பலி..!!! 2 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்..!!!
கொரோனா வைரசால் பல வல்லரசு நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் ஒன்றான அமெரிக்கா கொரோனா வைரஸால் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டு வருவதால் அங்குள்ள மக்கள் பெரிதும் அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,150 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என்று அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (Johns Hopkins University) திங்கள்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸின் எண்ணிக்கையின்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் 3,66,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பார்க்கும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,941 ஆகும்.
அமெரிக்காவில் இந்த நோய்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை கடந்த பல நாட்களாக ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு இறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக உலகளவில் கொரோனாவால் அதிக இறப்புகளை சந்தித்த நாடான இத்தாலி (16,523) மற்றும் ஸ்பெயின் (13,341) ஆகிய நாடுகளின் இறப்புகளின் எண்ணிக்கையை நெருங்கி கொண்டு வருகிறது. ஏற்கெனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்காவில் இரு வாரங்களுக்கு மக்கள் மிகவும் கஷ்டமான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கொரோனாவினால் அமெரிக்காவில் இரண்டு லட்சம் பேர் வரை இறக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.