அமீரக செய்திகள்

துபாயில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தவிர்க்க “பொது விலைப்பட்டியல்” வெளியீடு..!!! DED அதிரடி நடவடிக்கை..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது நாம் அறிந்ததே. இந்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடுவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அமீரகம் முழுவதும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சூப்பர்மார்க்கெட்கள் மற்றும் இன்னபிற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் விற்பனை நிலையங்களே முழுநேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வேளையில் துபாய் நகரில் விலை ஏற்றம் தொடர்பான ஆய்வுகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல விற்பனை நிலையங்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி விலையை உயர்த்தி விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனை தடுக்கும் விதமாக, குடியிருப்பாளர்களுக்கு இதன் மூலம் எவ்வித பாரமும் ஏற்படாத வண்ணம் விற்பனை நிலையங்களை கண்காணிப்பதற்காகவே பிரத்யேகமான ஒரு இணையதளத்தை சமீபத்தில் துபாய் பொருளாதார மேம்பாட்டுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த தளத்தை பயன்படுத்தி குடியிருப்பாளர்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துபாய் பொருளாதார மேம்பாட்டுத்துறை, அன்றாட தேவைக்கு உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் துபாய் நகரின் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வெவேறு நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் விலை ஏற்றத்தை தவிர்க்கும் விதமாக ஒரு பொதுவான விலை பட்டியலை குடியிருப்பாளர்கள் வசதிக்காக DED வரையறை செய்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் எவரும் விலை ஏற்றம் தொடர்பான எந்த ஒரு பாதிப்பும் இன்றி அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தின் மூலம் அன்றாட விலை நிலவரங்களை தெரிந்து கொள்வதுடன், விலை ஏற்றம் தொடர்பான புகார்களையும் உடனுக்குடன் அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நிலவரப்படி, அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் கீழே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!