அமீரக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்..!! இயக்க கட்டுப்பாடுகளில் தளர்வு..!! வெளியில் செல்ல அனுமதி தேவையில்லை..!! முழு விபரம் உள்ளே..

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் விதிக்கப்பட்டிருந்த இயக்க கட்டுப்பாடானது தற்பொழுது சற்று தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குடியிருப்பாளர்கள் அனுமதி இல்லாமல் வெளியே செல்லலாம் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.

சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவற்றின் முடிவுகளுக்கு இணங்க, மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு, ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை முதல் அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக அமலில் இருக்கும் இயக்கக்கட்டுப்பாட்டிற்கான தடையில் சிலவற்றிற்கான தடை தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.

ரமலான் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் இந்த நடவடிக்கையில், குடியிருப்பாளர்கள் வெளியே செல்ல அனுமதி பெற தேவையில்லை என்றும் வெளியே செல்லும் போது கடுமையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனையொட்டி புதிய வழிமுறைகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட வணிக நடவடிக்கைகள் மற்றும் முக்கிய துறைகளின் பட்டியலையும் இந்த குழு வெளியிட்டுள்ளது.

இதன் படி பொது போக்குவரத்து (பஸ் மற்றும் மெட்ரோ), உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (பஃபே மற்றும் ஷிஷா தவிர), சில்லறை துறை (மால்கள், உயர் தெரு விற்பனை நிலையங்கள் மற்றும் சூக்குகள்), மொத்த விற்பனை துறை மற்றும் பராமரிப்பு கடைகள் ஆகியவை சில நிபந்தனைகளின் கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள், ஜிம்கள், மற்றும் மசாஜ் பார்லர் போன்றவைகளை திறக்காமல் ஹோட்டல்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களில் அதிகபட்சம் 30% பேர் தங்கள் அலுவலகங்களிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான இயக்கம் மீதான குறைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

 • கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, பொது மக்கள் வெளியே செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் தற்பொழுது இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரையிலான காலத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில், மருத்துவ அவசரநிலைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
 • தனிநபர்கள் அனுமதி இல்லாமல் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீடுகளை விட்டு வெளியேற முடியும். மேலும், வெளியே செல்லும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு AED1,000 அபராதம் விதிக்கப்படும்.

வீட்டிற்கு வெளியே உடற்பயிற்சி

 • பொது மக்கள் தங்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம், அவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறாமல் அப்பகுதிக்குள்ளேயே உடற்பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை நடைபயிற்சி, ஓட்டம் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளலாம்.
 • ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று நபர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய முடியும். தனிநபர்கள் மற்ற நபர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தூரத்தை உறுதி செய்வது மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

குடும்ப வருகைகள்

 • ரமலான் மாத ஆரம்பம் மற்றும் இந்த புனித மாதத்தைச் சுற்றியுள்ள சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது உறுப்பினர்கள் தங்கள் முக்கிய உறவினர்களை மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
 • ரமலான் மாதத்தில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வயதானவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். பொது அல்லது தனியார் இடங்களில் கூட்டங்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக விற்பனை நிலையங்கள்

 • ஷாப்பிங் மால்கள், சந்தைகள் மற்றும் வணிக விற்பனை நிலையங்கள் தினமும் மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். மேலும், ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் அதிகபட்சம் அதன் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 30 சதவிகிதம் மட்டுமே அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படும்.
 • நெரிசல் மற்றும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்த மால்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் அனுமதிக்கப்படவில்லை.
 • மால்கள் மற்றும் உணவகங்களில் வேலட் பார்க்கிங் இருக்காது. ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் முதல் மணி நேரம் இலவசமாக இருக்கும்.
 • மால்களில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 25% பார்க்கிங் இடங்கள் மட்டுமே திறந்திருக்கும். அவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் ஷாப்பிங் மாலிற்கு செல்ல வேண்டும்
 • மால்களுக்குள் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பார்வையாளர்கள் நுழைவாயில்களில் வெப்பநிலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் மாலுக்குள் நுழைவதற்கான நிபந்தனையாக முக கவசங்களை அணிய வேண்டும்.
 • மாலில் யாராவது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டால், அனைத்து வணிக வளாகங்களிலும் அவசர நோக்கங்களுக்காக மருத்துவ தனிமைப்படுத்தும் அறை இருக்கும்.
 • 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மால்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 • பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் மற்றும் எலக்ட்ரானிக் கட்டண முறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மால்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

உணவகங்கள் மற்றும் கஃபேக்கள்

 • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் சாதாரணமாக இயங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஷிஷா மற்றும் பஃபே சேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
 • உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் அதன் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 30 சதவிகிதம் மட்டுமே உணவகங்களில் அமர்ந்து உணவு உன்ன அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 • தனிநபர்களிடையே இரண்டு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து உணவகங்களின் ஊழியர்களும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
 • இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை உணவு விநியோக சேவைகளை (Delivery) வழங்க உணவகங்களுக்கு அனுமதி உண்டு.

பொது போக்குவரத்து

 • துபாய் மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ஏப்ரல் 26 முதல் தொடங்கப்பட்டு போக்குவரத்து சேவைகளுக்கு வழக்கமான கட்டணம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
 • பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

இயக்க கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள், நிறுவனங்கள், அலுவலங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:

மால்கள் மற்றும் வணிக மையங்கள் (Malls and shopping centres)

சில்லறை கடைகள் (Retail shops)

திறந்த சந்தைகள் (Open markets)

மருந்தகங்கள் (Pharmacies)

பணம் பரிமாற்ற நிறுவனங்கள் (Money exchange houses)

கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் (பஃபே அல்லது ஷீஷா கஃபேக்கள் இல்லை) (Cafes and restaurants)

உணவு சேவைகள் (food services)

டெலிவரி (Delivery)

சமூகப்பணி (social services)

சலவை (laundry)

அழகு நிலையம் (salon)

மருத்துவ சேவை நிலையங்கள் (medical facilities)

இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் (imported offices)

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் (Manufacturers of medical equipment)

தொழிற்சாலைகள் (factories)

நீர் மற்றும் மின்சாரம் (water and electricity)

தொலைத்தொடர்பு (communication)

மீடியா (media)

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் (Ports, airports, and airlines)

பாதுகாப்பு (இராணுவம், போலீஸ்)

பொது போக்குவரத்து (Public Transport)

கட்டுமானம் (Construction)

தங்கும் விடுதிகள் (Hotels)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!