Naif, Al Ras பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!!!
துபாயில் உள்ள அல் ராஸ் மற்றும் நைஃப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த முழு நேர ஊரடங்கானது தற்பொழுது தளர்த்தப்பட்டதாக துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு (Supreme Committee of Crisis and Disaster Management) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் இரு பகுதிகளிலும் புதிதாக எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அமீரகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாயில் அல் ராஸ் கடந்த மார்ச் 31 ம் தேதியில் இருந்து கடுமையான இயக்க கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு பகுதிகளுக்கு செல்லவோ அல்லது வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருவதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 6,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் இப்பகுதிகளில் வசிப்பவர்களிடையே நடத்தப்பட்டன. கொரோனாவிற்கெதிரான விரிவான தேசிய கிருமி நீக்கம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அணிகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக இது சாத்தியமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறை, துபாய் முனிசிபாலிடி மற்றும் துபாய் ஆம்புலன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து விரிவான கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் துபாய் சுகாதார ஆணையத்தால் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிகளில் வசிக்கக்கூடியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
#Dubai‘s Supreme Committee of Crisis and Disaster Management eases restrictions on movement in Al Ras and Naif. The Decision comes as both areas record zero COVID-19 cases in the last two days.
— Dubai Media Office (@DXBMediaOffice) April 26, 2020