துபாய் மெட்ரோ அடுத்த வாரம் முதல் தொடங்க வாய்ப்பு..!! மெட்ரோ நிலையங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை வெளியிட்ட DED..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக துபாயில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக துபாய் மெட்ரோ போக்குவரத்து சேவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் பொருளாதார அமைச்சகம் (Dubai Economic Department – DED) வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்குள் துபாய் மெட்ரோ சேவை மீண்டும் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் முழு நேர சேவையாக இல்லாமல் பகுதி நேரம் மட்டும் போக்குவரத்து சேவை முதற்கட்டமாக தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துபாய் மெட்ரோ, ரெட் மற்றும் கிரீன் என்ற இரண்டு வழி தடங்களில் தனது சேவையை இதுவரையிலும் அளித்து வருகிறது. மெட்ரோ சேவை தொடங்கிய காலத்திலிருந்து எந்த சூழ்நிலையிலும் தடையின்றி தனது சேவையை தொடர்ந்து பொதுமக்களுக்கு அளித்து வந்தது. இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து முதன் முதலாக மெட்ரோ சேவை தற்காலிகமாக தடை செய்யயப்படுவதாக துபாய் மெட்ரோ நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது தற்காலிக தடைக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்படும் மெட்ரோ சேவையானது, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மெட்ரோ நிலையங்களை தவிர்த்து அனைத்து மெட்ரோ நிலையங்களும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நேரங்களில் அதாவது அலுவலக நேரங்களில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மெட்ரோ ரயில் வருகைக்கான காத்திருப்பு நேரம் மூன்று நிமிடங்களாக இருக்கும் என்றும், தேவை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வழிகாட்டுதலின் படி ஒரு வாரத்திற்கு பிறகு மறு மதிப்பீடு செய்யப்படும் என்றும் துபாய் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள்
- மெட்ரோ சேவை தொடங்கப்பட்டாலும், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வைரஸிற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
- துபாய் மெட்ரோ அதிகாரிகள், மெட்ரோ நிலையங்களின் நுழைவாயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர கூட்ட மேலாண்மை நடைமுறைகளை கடைபிடிப்பர்.
- ஊழியர்கள் மற்றும் பயணிகள் முக கவசம் அணிய கட்டாய நடைமுறைகள் விதிக்கப்படும்.
- மெட்ரோ மிலையங்களில் பயணிகளின் நெரிசலை குறைக்க ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு நபர்கள் மட்டும் லிஃப்ட் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
- கூட்ட நெரிசலை தவிர்க்க மெட்ரோ நிலையங்களில் ரயில் வந்து செல்லும் தளத்திற்கு செல்ல பயன்படும் எஸ்கேலேட்டர் தற்காலிகமாக மூடப்படும்.