அபுதாபியில் ஹோம் டெலிவரி செய்யும் விற்பனை நிறுவனங்களுக்கு “Free Taxi Service”அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக அமீரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சில்லறை விற்பனை நிலையங்களிலும் (retail outlets) பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்பொழுது ஹோம் டெலிவரி செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், விற்பனை நிலையங்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் தங்கள் நிறுவனத்திடம் உள்ள வாகனத்தை மட்டுமே பயன்படுத்தி ஹோம் டெலிவரி செய்வதால் டெலிவரி செய்வதில் கால தாமதங்களும் ஏற்படுகின்றன.
ITC starts the implementation of the Taxi Services for Outlets Support Initiative. ITC will offer delivery services to the public using its taxis in coordination with all outlets within the Emirate of Abu Dhabi. #StayHome #StaySafe @AbuDhabiDMT @AbuDhabiDED pic.twitter.com/FdZUeNT4Gw
— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) March 30, 2020
எனவே, இந்த விற்பனை நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் அபுதாபி போக்குவரத்து ஆணையம், அபுதாபியில் இலவச டாக்ஸி சேவைகளை சில்லறை விற்பனை நிலையங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்த டாக்ஸி சேவைகளுக்குண்டான கட்டணம் ஏதும் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தனது டாக்ஸி சேவைகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு விநியோக சேவை வழங்குவதில் அக்கறை கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (Department of Municipalities and Transport,DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre,ITC) தெரிவித்துள்ளது.
இதன் மூலம், விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்கள் சேகரிக்கப்பட்டு அப்பொருட்களை ஆர்டர் செய்த மக்களிடம் உரிய நேரத்தில் சென்று வழங்கப்படும். மேலும், இந்த டாக்ஸியை ஓட்டும் ஓட்டுனர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி நன்றாக தெரிந்தவர்களாகவும், டெலிவரி செய்யும் நேரங்களில் முகக்கவசம் (facemask), கையுறை (gloves) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைளை பின்பற்றவும் செய்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இலவச டாக்ஸி சேவைகளை 600535353 என்ற எண்ணில் பதிவுசெய்து அபுதாபியில் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.