அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய கமிட்டி..!! அபுதாபி எக்சிகியூடிவ் கவுன்சில் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி எக்சிகியூடிவ் கவுன்சில், அபுதாபியில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ‘அபுதாபி தொழிலாளர்கள் குழு (Abu Dhabi Workers Committee)’ என்ற ஒன்றை நிறுவ இருப்பதாக தீர்மானம் வெளியிட்டுள்ளது.
கூட்டாட்சி மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி, அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் தங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள வசதிகளை, தொழிலாளர் சட்டத்திற்கு இணங்க மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் குறித்த ஆய்வுத் திட்டங்களை இந்த குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான செல்லுபடியாகும் பணி ஒப்பந்தங்களின் (valid work contracts) இருப்பை உறுதிசெய்வதும், தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும், தங்களின் பணிக்கான சம்பளத்தை முறையாக பெருகிறார்களா என்பதும் இந்த ஆய்வு திட்டத்தில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு பொருத்தமான வாழ்க்கை சூழலை வழங்குவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் இந்த குழு நிபுணத்துவம் பெற்றதென்றும், தொழிலாளர்களின் புகார்களை பெறுவதற்கும் கையாளுவதற்கும் மேலும் அதற்கு தீர்வுகளைக் கண்டறிவதற்கு தேவையான செயல்முறையை நிறுவுவது போன்ற பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
தொழிலாளர்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பதிவுகள் மற்றும் சம்பள பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை கடைபிடிக்காத நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளையும் இந்த குழு ஆராயும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழு, தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் கொள்கைகளையும் மறுஆய்வு செய்யும் என்றும், அபுதாபியில் பொருளாதாரம் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து சமர்ப்பிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இந்த ‘அபுதாபி தொழிலாளர்கள் குழுவில்’ நீதித்துறை பிரதிநிதிகள், அபுதாபி காவல்துறை, நிதித் துறை, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, சமூக மேம்பாட்டுத் துறை, உயர்நிலை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான கார்ப்பரேஷன், இருப்பிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் மற்றும் மனிதவளம் மற்றும் எமிரேட்டிசேசன் அமைச்சகம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Executive Committee of the Abu Dhabi Executive Council has issued a resolution forming the Abu Dhabi Workers Committee, chaired by the Chairman of the Department of Economic Development. pic.twitter.com/Ci3BobpbKB
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 22, 2020