கொரோனா வைரஸிலிருந்து ஊழியர்களை பாதுகாக்க தவறினால் கடும் தண்டனை..!!! தனியார் நிறுவனங்களுக்கு கத்தார் அரசு எச்சரிக்கை..!!!
கத்தார் நாட்டின் நிர்வாக மேம்பாட்டு துறை (Ministry of Administrative Development) மற்றும் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் (Labor and Social Affairs) சார்ந்த துறையும் ஒன்றிணைந்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் படி, கத்தார் நாட்டிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கத்தார் அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நிறுவனங்களின் அலுவலகங்களிலும் மற்றும் தொழிலாளர் தங்கும் விடுதியிலும் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பணியிடங்கள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்தில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை நேரங்களை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 மணிநேரமாக நிர்ணயிப்பது, தொழிலாளர் தங்கும் விடுதியின் அறையில் ஒரு நபருக்கு 6 சதுர அடி என்ற கணக்கில் இடம் ஒதுக்குவது, பிறருக்கு அளிக்கக்கூடிய அனைத்து வகையான பயிற்சிகளையும் (Training) நிறுத்துவது, அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, ஊழியர்கள் ஒன்றாக கூடக்கூடிய கேன்டீன் மற்றும் உடை மாற்றும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவை அடங்கும். இது தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் நிறுவனங்கள், கொரோனா வைரஸை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக “நிறுவனம் மற்றும் அரசால் பின்பற்றப்படும் நடைமுறைகள்” குறித்த விழிப்புணர்வை தங்கள் ஊழியர்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் மேலும் ஊழியர்களின் வெப்பநிலையை தவறாமல் சோதனையிடுவதுடன் அவர்களின் சுவாச அறிகுறிகளைக் கண்காணிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் பணியிடங்கள், தங்குமிடம், பஸ், குளியலறைகள், சமையலறைகள், கேண்டீன்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பிற இடங்களில் அதிக மனித தொடர்பு உள்ள பகுதிகளை வழக்கமாக சுத்தம் செய்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படும் மேற்பரப்புகளான, கதவு, விசைப்பலகைகள், ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் மேசைகள் போன்றவை ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்பாக ஊழியர்களால் நன்கு துடைக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தொழிலாளர் ஆய்வுத் துறையானது (Labor Inspection Department) அனைத்து நிறுவனங்களின் நிலைமைகளையும் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும், மேலும் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை பற்றிய விபரங்களை தெரிவிக்கத் தவறினால், தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான சட்டத்தின் கீழ் நிறுவனத்திற்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.