ஓமான் விசா வேலிடிட்டி முடிந்தவர்கள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள முடியும்..!!! ROP தகவல்.!!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டின் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்போர் ராயல் ஓமான் போலீஸ் (Royal Oman Police) இணையதளம் rop.gov.om மூலமாக தங்களின் விசாக்களை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று ராயல் ஓமான் போலீஸ் (ROP) தெரிவித்துள்ளது.
மேலும் காலாவதியான விசாக்களை புதுப்பிக்க காலதாமதத்திற்கான அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவானது கொரோனா வைரஸ் பரவலால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராயல் ஓமான் போலீஸ் அதன் அனைத்து சேவைகளையும் மூடியதை தொடர்ந்து எடுக்கப்பட்டதாக ROP துறையை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஓமான் நாட்டிற்குள் வசிக்கக்கூடிய ரெசிடென்ஸ் விசா காலாவதியான குடியிருப்பாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்களின் விசாக்களை ராயல் ஓமான் போலீஸ் இணையதளத்தின் மூலம் எவ்வித அபராதமும் இன்றி புதுப்பித்துக்கொள்ளமுடியும். மேலும் விசா புதுப்பித்தல் செயல்முறைக்கு வழங்கப்படும் ROP முத்திரை (ROP Stamp) இல்லாமல் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஓமான் நாட்டின் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்போர் பலரும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஓமான் நாட்டிற்குள் வரமுடியாமல் தங்கள் நாடுகளிலேயே தங்கியுள்ளனர். அவர்களும் இந்த இணையதள சேவையின் மூலம் தங்களின் விசாக்களை புதுப்பித்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், பயண தடை (Travel Ban) தற்போது அமலில் இருப்பதால், அந்த தடை நீங்கிய பின்னர் அவர்களின் விசாக்களை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரித்துள்ளார். இந்த காலதாமதத்திற்கு அபராதம் ஏதும் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்றும் கூறியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி டூரிஸ்ட் விசாவில் இருப்பவர்களும் தங்களின் விசா காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#MorningMinute: Residents can renew visa online https://t.co/D7UWoajLOi @RoyalOmanPolice pic.twitter.com/sQjkDLVPo3
— Times of Oman (@timesofoman) April 5, 2020