அமீரக செய்திகள்

தாயகம் செல்ல விரும்புவோரை திருப்பி அனுப்பும் அமீரகத்தின் முடிவு..!! மறுக்கும் நாடுகளுக்கு தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள்..!!

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டும், வருடாந்திர விடுமுறை கொடுக்கப்பட்டும் வேலையின்றி அவரவர் இருப்பிடங்களிலேயே இருந்து வருகின்றனர். அவர்களில் பலர், தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தும், அவ்வாறு செல்பவர்களுக்காக சிறப்பு விமானங்களை இயக்க அமீரகம் அனுமதி அளித்திருந்தும், அவர்களை திருப்பி அனுப்புவதற்கு மறுப்பு தெரிவிக்கும் மற்ற அனைத்து நாடுகளுடனான ஒத்துழைப்பு மற்றும் தொழிலாளர் நல உறவுகளை மறுசீரமைப்பதற்கான பல்வேறு வழிகளையும் பரிசீலித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (Ministry of Human Resources and Emiratisation) சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (Emirates News Agency,WAM) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டவர்கள் திருப்பி வர மறுப்பு தெரிவிக்கும் நாடுகளில் இருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஒதுக்கீடு (Quota) முறையை செயல்படுத்துதல் ஆகியவை இந்த மறுபரிசீலனையில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அமீரக அமைச்சகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதும் இந்த பரிசீலனையில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடு திரும்ப விரும்பும் ஊழியர்களை திருப்பி அனுப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டுள்ள வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நாடுகளுடனான தொழிலாளர் உறவுகள் தொடர்பான தற்போதைய கூட்டாண்மைகளை திருத்துவது குறித்து MoHRE பரிசீலித்து வருவதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸின் பாதிப்புகளை தொடர்ந்து அமீரகத்தில் வசிக்கும் பல்வேறு நாட்டினரும் தங்களின் சொந்த நாடு திரும்புவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அந்தந்த நாடுகள் பதிலளிக்காததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சகத்தை சார்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபை (Federal Authority for Identity and Citizenship), வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (Ministry of Foreign Affairs and International Cooperation), சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Emergency Crisis and Disaster Management Authority,NCEMA) உள்ளிட்ட அமைச்சகங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் மனிதாபிமான முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் தொடங்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கையின் மூலம் தங்கள் நாடுகளுக்கு செல்ல விரும்பும் ஊழியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களின் நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஏற்கெனவே கொரோனா வைரசால் தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளையொட்டி, இந்த மாத ஆரம்பத்தில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சகமானது தனியார் துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பினால் வருடாந்திர விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றும் இதற்காக ஊழியர்கள் தங்கள் வருடாந்திர விடுப்பு தேதிகளை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தது. மேலும் ஊழியர்கள் பணிபுரியும் தங்கள் நிறுவனத்துடன் உடன்பட்டு ஊதியம் இல்லாத விடுப்பு அளிப்பதற்கும் அமீரக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!