அமீரக செய்திகள்

கொரோனா எதிரொலி : துபாயில் 70 சதவீத வணிக நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு..!! துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய ஆய்வில் தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. அதே போல், கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கிட்டத்தட்ட 70 சதவீத வணிகங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (Dubai Chamber of Commerce) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 90 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனாவின் பாதிப்பால் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை மற்றும் வருவாய் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும், ரியல் எஸ்டேட், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருவாய், இந்த ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டில் முதல் காலாண்டை விட 75 சதவீதத்திற்கும் மேலாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தது 48 சதவிகித நிறுவனங்கள் கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையை கையாள்வதற்கு தயாராக இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அந்நிறுவனங்கள், கொரோனாவின் தாக்கத்தைத் தணிக்க ஊழியர்கள் மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கத்தை தணிக்க வரவிருக்கும் காலகட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கைகளை துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பரிந்துரைகளாக பட்டியலிட்டுள்ளது. அந்த வகையில் வணிக நிறுவனங்களுக்கு சட்டரீதியிலான வழக்கு மற்றும் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு, வாடகை மற்றும் வாடகை தொடர்புடைய செலவில் இருந்து நிவாரணம், அரசாங்க கட்டணம் மற்றும் விதிமுறைகளில் ஆதரவு, பணப்புழக்கத்தை அதிகரித்தல் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய கடனுதவி போன்றவற்றை பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!