அமீரக செய்திகள்

UAE : இந்தியாவிற்கு மே 7 அன்று இரண்டு விமானங்கள் இயக்கப்பட வாய்ப்பு..!! கேரளாவிற்கே முதலில் இயக்கப்படலாம் எனவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகங்கள், அமீரகத்தில் தவித்து வரும் இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் மிகப்பெரிய நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் என்றும் வரும் மே 7 ஆம் தேதி இந்தியாவிற்கு முதல் கட்டமாக பயணிக்க கூடிய குடிமக்களின் பட்டியலை தயார்படுத்தும் என்றும் அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் இன்று அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“நாங்கள் ஒரு விமான பயணம் தொடர்பான அறிக்கையை உருவாக்குவோம். அந்த அறிக்கையின் படி யார் எந்த விமானத்தில் செல்வார்கள் என்பதை தீர்மானிப்போம். இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவிப்பவர்கள் பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளத்தின் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படும்” என்றும் இந்திய தூதர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயணிகளின் முழு விபர பட்டியல் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு வழங்கப்படும். அந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவிற்கு பயணிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ஏர் இந்தியா பயண டிக்கெட் வழங்கும்” என்றும் பவன் கபூர் கூறியுள்ளார்.

அமீரகத்திலிருந்து திருப்பி அனுப்பும் இந்த நடவடிக்கையானது கட்டண அடிப்படையில் நடைபெறும் என்றும் மேலும் விமான பயணத்திற்காக சிறப்பு பயணிகள் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஏர் இந்தியா வலைத்தளம் மூலமாகவோ அல்லது ஏர் இந்தியாவின் கிளை அலுவலகங்களிலோ பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்திய தூதர் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பவன் கபூர் அவர்கள், இதற்கு முன்னதாக நங்கள் இதுபோன்ற ஒரு திருப்பிஅனுப்பும் நடவடிக்கை எதையும் செய்ததில்லை. எனவே, ஆரம்ப கட்ட நடவடிக்கையான, அதாவது மே 7 ஆம் தேதி அன்று இரண்டுக்கும் மேற்பட்ட விமானங்கள் விமான பயணத்திற்கு பயன்படுத்த வாய்ப்பில்லை என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

“இந்த நடவடிக்கை எவ்வாறு செல்கிறது என்பதை இந்திய அரசாங்கம் உற்றுநோக்கும். மேலும் முழு அளவிலான செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முனபாக இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த திருப்பி அனுப்பும் திட்டம் வெற்றிபெற எங்களுக்கு மக்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படும். மக்கள் நீண்ட காலமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் வேலை இழப்பு உள்ளிட்ட மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னதாக, இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ப்ளூ காலர் தொழிலாளர்கள் முன்னுரிமை பெறுவார்கள் என்று கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் முதல் கட்டமாக இயக்கப்படும் இரண்டு விமானங்களும், வெளிநாடுகளிலிருந்து வரும் தங்கள் மாநிலத்தவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தப்படும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுமார் 200,000 பேர் தங்குவதற்கு உண்டான வசதிகளுடன் கேரள மாநிலம் தயாராக இருப்பதால், முதல் இரண்டு விமானங்களும் கேரள மாநிலத்திற்கே பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலும் 197,000 பேர் இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து இந்திய தூதரகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று தூதரகம் தெரிவித்திருந்தது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!