வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர்..!! வெளியுறவு செயலாளர் தகவல்..!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில் வேகமாக பரவி வருவதால், மாலத்தீவு, குவைத், பங்களாதேஷ், மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான சாத்திய கூறுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக இன்று மே 10 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் வெளிநாடுகளில் வேலை செய்து வரும் இலங்கையர்களின் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரிவின் பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு உதவ, அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவையின் ஆய்வறிக்கை குறித்த விவரங்களை இலங்கையின் வெளியுறவு செயலாளர் ரவிநாதா ஆர்யசின்ஹா இன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ரவிநாதா ஆர்யசின்ஹா கூறுகையில், “வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டால், அதிகபட்ச பாதிப்பிற்கு உள்ளானவர்களின் அடிப்படையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மாலத்தீவில் வசிக்கும் 1,200 முதல் 1,500 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான இலங்கையர்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தான, குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது துறை சார்ந்த அதிகாரிகளுடன் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவி வந்த பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கை நாட்டவர்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான சாத்தியங்களையும் அமைச்சர் தினேஷ் குணவர்தான உற்றுநோக்குவதாகவும் ரவிநாதா கூறியுள்ளார்.
“பங்களாதேஷில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர், அவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் மத்திய கிழக்கிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் நாங்கள் இதேபோல் கவனம் செலுத்துவோம், ”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.