UAE : ஈத் விடுமுறை நாட்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருட ஈத் விடுமுறை நாட்களின் போது பொதுமக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை தவிர்க்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை தங்கள் இல்லத்திற்கு அழைப்பதையும் தவிர்க்குமாறு அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் டாக்டர் அம்னா அல் தஹாக் அல் ஷம்சி, ஈத் விடுமுறையின் போது வழமையாக நடக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி சந்திப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கூட்டமாக ஒன்று கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் ஒவ்வொரு ஈத் விடுமுறையின் போதும் நடக்கும் வழமையான இந்த பழக்கங்களை இந்த வருடம் தவிர்க்குமாறு சமூகத்தை நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிலிருந்து சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை டாக்டர் அல் ஷம்சி வலியுறுத்தியுள்ளார். “கொரோனா வைரஸ் அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது ஒவ்வொரு தனிநபரின் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பாகும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கொரோனாவின் பாதிப்பையொட்டி வாகனங்களில் மூன்று நபர்களுக்கு மேல் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பின் மூன்று நபர்களுக்கு மேல் ஒரே வாகனத்தில் பயணம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், போது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடுவதை தவிர்க்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dr. Al Shamsi: We urge the public to continue to follow health practices and abide by the measures taken to prevent the spread of the Coronavirus. #UAEGov
— UAEGov (@uaegov) May 16, 2020