அமீரக செய்திகள்

இந்தியாவிற்கு அமீரகம் வழங்கிய 7 டன் அளவிலான கொரோனா மருத்துவ உதவி..!!! பல நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டிய அமீரகம்..!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளுக்கு தனது நாட்டிலிருந்து மருத்துவப் பொருட்களை அனுப்பி தொடர்ந்து உதவியளித்து வருகிறது. இந்த தொடர் பங்களிப்பில் தற்பொழுது கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான இந்திய நாட்டின் முயற்சிகளை அதிகரிப்பதற்கு உதவி செய்யும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகம் ஏழு மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்கள் கொண்ட விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடும் சுமார் 7,000 மருத்துவ நிபுணர்களுக்கு இந்த மருத்துவப்பொருட்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பொருட்களை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் ஐக்கிய அரபு அமீரக தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறியதாவது “கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க முற்படும் நாடுகளுக்கு தனது ஆதரவை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் உறுதிபூண்டுள்ளது. இந்தியாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்யும் இந்த உதவி பல ஆண்டுகளாக இந்த இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட சகோதரதத்துவ உறவை அங்கீகரிப்பதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“கொரோனவை எதிர்த்துப் போராடுவது உலகளவில் முதன்மையான காரியமாக இருக்கிறது. மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த போராடும் மற்ற நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்றுவரை, ஐக்கிய அரபு அமீரகம் இங்கிலாந்து, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,பிலிப்பைன்ஸ்,தென் ஆப்ரிக்கா, ஈரான், மலேஷியா, கொலம்பியா, நேபாளம், சூடான் உள்ளிட்ட 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 348 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த செயல்பாட்டில் கிட்டத்தட்ட கொரோனாவை எதிர்த்து போராடும் 348,000 மருத்துவ நிபுணர்களுக்கு உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!