துபாய் : மெட்ரோ, பஸ், மரைன் போக்குவரத்து இனி வழக்கமான நேரங்களில் இயங்கும்..!! RTA அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டம் நிறைவடைந்ததையொட்டி, அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த இயக்க தடையானது நீக்கப்பட்டு பொதுமக்கள் எந்த நேரத்திலும் வெளியே செல்லலாம் என்று அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது மெட்ரோ, பேருந்து மற்றும் கடல் வழி போக்குவரத்து ஆகியவற்றின் பயண நேரங்கள் துபாயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவைகள்
அமீரக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து துபாயில் இயங்கி வரும் அனைத்து மெட்ரோக்களும் தனது வழக்கமான நேரங்களில் மீண்டும் இயங்கும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, கிரீன் லைனில் உள்ள மெட்ரோக்கள் இனிமேல் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை அதிகாலை 5.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் (மறுநாள் காலை) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் (மறுநாள் காலை) இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ரெட் லைனில் இயங்கும் மெட்ரோக்கள் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், மற்ற நாட்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 வரை இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள்
துபாய் பேருந்து சேவைகள் அதிகாலை 4 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 1 மணி வரை (மறுநாள்) முழுமையாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமீரகத்தின் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும் இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் RTA தெரிவித்துள்ளது.
மரைன் போக்குவரத்து சேவைகள்
துபாய் மரைன் போக்குவரத்து சேவைகள் துபாய் ஆப்ரா வழியாக நான்கு பகுதிகளில் (அல்ஜதாத், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, க்ரீக் மற்றும் மெரினா) மட்டுமே தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடரும் என்றும், மற்ற கடல் போக்குவரத்து சேவைகள் (துபாய் படகு, துபாய் வாட்டர் டாக்ஸி, துபாய் வாட்டர் பஸ் போன்றவை) மறு அறிவிப்பு வெளியிடும் வரை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் அனைத்து பயணிகளும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் பயணத்தின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் RTA சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. துபாயின் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும், அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டத்தின் நேரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கடந்த மூன்று மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.