Repatriation : ஓமானில் இருந்து இலங்கைக்கு சென்ற முதல் விமானம்..!! 290 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்ததாக அமைச்சகம் அறிவிப்பு..!!

கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையின் காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில் சிக்கி தவித்த 290 இலங்கையர்கள் ஓமான் நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் மூலமாக தற்பொழுது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசானது கொரோனாவின் பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வரும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம், வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சமீபத்தில், இத்தாலி, சிங்கப்பூர், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கையர்கள் தாயகத்திற்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, தற்பொழுது ஓமான் நாட்டில் வசித்து வந்த 290 இலங்கையர்கள் முதற்கட்டமாக ஓமான் நாட்டில் இருந்து இலங்கைக்கு மீட்டு வந்துள்ளதாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlines) விமான நிறுவனத்தின் விமானம் மூலம் ஓமான் தலைநகரான மஸ்கட்டில் இருந்து இலங்கையில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை வந்தடைந்த அனைவருக்கும் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஹாங்காங்கில் சிக்கி தவித்த 26 இலங்கையர்களும் தற்பொழுது தாயகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.