UAE : வழிபாட்டாளர்கள் மசூதிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலினால் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் (ஜூலை 1) அமீரகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள், வயதானவர்கள், 12 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் செல்ல வேண்டாம் என்றும் 30 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மசூதிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்த வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் மேலும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம், கையுறைகள் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிமுறைகள்
- வழிபாட்டாளர்கள் தங்களுக்கிடையில் 3 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
- ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதற்கு அனுமதி இல்லை.
- தொழுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் உடல் சுத்தம் செய்தல் (Ablution) வீட்டிலேயே செய்யப்பட வேண்டும்.
- புனித குர்ஆனைப் படிக்க, வழிபாட்டாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சொந்த நகல்களை பயன்படுத்த வேண்டும்.
- அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் சொந்த முசல்லாவை (தொழுவதற்கான விரிப்பு) மசூதிக்கு கொண்டு வர வேண்டும்.
- அனைத்து வழிபாட்டாளர்களும் அல்ஹோஸ்ன் (Al Hosn) என்ற ட்ராக்கிங் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்
- நாள்பட்ட நோய்கள் மற்றும் முதியவர்கள் போன்ற நோய்தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மசூதிகளுக்கு செல்லக்கூடாது.