UAE : கேரளாவிற்கு இலவச தனி விமானம் இயக்கிய ஜாமியா மர்கஸ் அமைப்பினர்..!! 180 க்கும் மேற்பட்டவர்கள் இலவச பயணம்..!!
தென்னிந்திய மாநிலத்தை தளமாகக் கொண்ட இஸ்லாமிய அமைப்பான ஜாமியா மர்கஸின் தாராள முயற்சியின் விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 180 க்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்று தனி விமானத்திற்கான பயண டிக்கெட் ஏதுமின்றி இலவசமாக தாயகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் இருந்து செல்லும் விமானமானது இன்று கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சென்றடையும் என்று மர்கஸ் அமைப்பின் அலுவலக பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி ஜாமியா மார்கெஸின் அதிபராக இருக்கும் இந்தியாவின் தலைமை இமாமான ஷேக் அபுபக்கர் அகமது அவர்களின் சிறப்பு அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மர்க்கஸ் அமைப்பின் மக்கள் தொடர்பு மேலாளர் டாக்டர் அப்துல் சலாம் சகாபி கூறுகையில், “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வெளிநாட்டவர்களுக்கு எங்களால் இயன்ற அளவு உதவி செய்ய விரும்பினோம். அமீரகத்தில் இருக்கும் பலரும் தாயகம் செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, ஒரு முழு விமானத்தையும் இலவசமாகப் பெற நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறினார்.
மேலும் கூறுகையில், “நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றோம். விமானத்தில் தகுதியானவர்கள் மட்டுமே இடங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொருவரும் கவனமாக பரிசோதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்கள், வேலை இழந்த குடியிருப்பாளர்கள், துன்பகரமான குடும்பங்கள் மற்றும் மருத்துவ பிரச்னை உடையவர்கள் போன்றவருக்கே நாங்கள் முன்னுரிமை அளித்தோம்” என்றும் கூறினார்.
இலவச விமானத்தின் பயனாளிகளில் தீக்ஷா மகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் அடங்குவர். “நாங்கள் இருவரும் விசிட் விசாவில் இங்கு வந்து சிக்கிக்கொண்டோம். கொரோனா தாக்கத்தின் காரணமாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. என் கணவர் 30 சதவீத ஊதியக் குறைப்பில் இருக்கிறார், எங்களுக்கு டிக்கெட் வாங்குவது சாத்தியமில்லை” என்று தீஷா மகேஷ் கூறினார். மேலும், “நாங்கள் இறுதியாக தாயகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்ததையொட்டி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் அவர் கூறினார். இதே போல், இக்கட்டான சூழ்நிலை கொண்ட பலரும் இந்த விமானத்தில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சின், கன்னூர், காலிகட் மற்றும் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மார்கஸ் அமைப்பின் மூலம் ஏற்கனவே 10 தனி விமானங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 156 க்கும் மேற்பட்ட இலவச டிக்கெட்டுகளை கஷ்டப்படும் சூழ்நிலையில் இருக்கின்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கி இருப்பதாகவும் ஊடக மற்றும் தகவல் தொடர்பு மேலாளர் முனீர் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.