வளைகுடா செய்திகள்
கத்தார் : புதிதாக 260 மசூதிகள் திறப்பு..!! அனைத்து வயதினரும் பூங்கா, கடற்கரை செல்ல அனுமதி.. நாளை முதல் ஆரம்பமாகும் 2 ம் கட்ட தளர்வு..!!
கத்தார் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல கட்டங்களாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட முதல் கட்டம் தற்பொழுது முடிவடைய இருக்கின்றது. இந்நிலையில், அந்நாட்டில் நாளை (ஜூலை 1) முதல் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்:
- முதல் கட்ட நடவடிக்கையில் திறக்கப்பட்டிருக்கும் மசூதிகளுடன் புதிதாக 260 க்கும் மேற்பட்ட மசூதிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும். கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மசூதிகளை வரும் நபர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
- அதிகபட்சம் 5 நபர்கள் வரை மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்படும் என்றும் விதிகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 10 நபர்கள் வரை ஒன்று கூடலாம் என அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத காரணங்களினால் கொரோனாவினால் பாதிக்கப்படுவது அதிகரிப்பதை தொடர்ந்து, 5 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
- 50 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிடத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அலுவலகங்களில் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிறுவனங்களும் ஊழியர்களும் பின்பற்ற வேண்டும். எளிதில் நோய்தொற்று பாதிக்கும் அபாயம் இருக்கும் நபர்கள் வீட்டில் இருந்த படியே தொடர்ந்து வேலை செய்யலாம்.
- 10 பேருக்கு மிகாமல் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் படகுகளை வாடகைக்கு எடுக்க அனுமதி அளிக்கப்படும். அனைத்து பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மற்றும் கார்னிச் ஆகியவை எல்லா வயதினருக்கும் மீண்டும் திறக்கப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- 10 பேருக்கு மிகாமல் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு திறந்தவெளி மற்றும் பெரிய அரங்குகளில் விளையாட்டு பயிற்சி பெற அனுமதிக்கப்படும்.
- மருத்துவ சேவைகளை வழங்கும் சுகாதார மையங்களில் அவசரகால சேவைகளை தொடர்ந்து வழங்கும் பொருட்டு, சுகாதார மையங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் 60 சதவீத திறனை கொண்டு இயங்கலாம்.
- உணவகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
- நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் குறைந்த வேலை நேரங்களுடன் மீண்டும் திறக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்கும்படி நெருக்கடி நிர்வாகத்திற்கான உச்ச குழு கேட்டுக்கொன்டுள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது, எஹ்தெராஸ் (Ehteraz) அப்ளிகேஷனை தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து வைத்திருப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.