செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பலாம்..!! விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்..!!

கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் பல இந்தியர்களும் அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 30 ம் தேதி, இந்தியாவின் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் இருக்கும் இந்தியர்களிடமிருந்து அமீரகம் திரும்புவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை அமைச்சகம் பெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரக செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி பெற்ற பலர் அந்நாட்டிற்குச் செல்ல எங்களை அணுகி வருகின்றனர். இது குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு குடிமக்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்தியாவில் செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்து வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் அந்நாடுகள் வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் தாராளமாக செல்லலாம் என்று கூறியுள்ளார்.
We have no problems with people having valid documents flying out of India to countries which are allowing foreigners to enter.
Due to this restriction our evacuation flights to UAE are going empty from India. People can fly as soon as local authorities lift restrictions.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 30, 2020
அமீரகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளின் காரணமாகவே, அமீரகத்திலிருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு மீட்டு வருவதற்காக இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு செல்லும் சிறப்பு விமானங்கள் பயணிகள் ஏதுமின்றி காலியாக செல்கின்றன. அமீரகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமாயின், விரைவிலேயே இந்தியாவில் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் மே 18 அன்று, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) மற்றும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA), செல்லுபடியாகும் குடியிருப்பு விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஜூன் 1 (இன்று) முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதற்கிடையில், ICA செல்லுபடியாகும் குடியிருப்பு விசாக்களை வைத்திருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப விரும்புவோரை “குடியிருப்பாளர்களின் நுழைவு அனுமதி” (Residents’ Entry Permit) என்ற சேவையின் கீழ் smartservices.ica.gov.ae என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசாக்களைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த முடிவு பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், வெளிநாடுகளில் இருக்கும் அமீரக ரெசிடென்ஸ் வைத்திருப்பவர்கள் வலைதளத்தில் பதிவு செய்ததன் பின்னர், ICA விடமிருந்து உறுதி செய்யப்பட்ட ஈமெயில் வந்தால் மட்டுமே விமான டிக்கெட்டினை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் ICA அமீரக குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.