அமீரகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மீண்டும் திறப்பு..!! 30 சதவீதத்தினருக்கு மட்டுமே அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் வரும் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்படவுள்ளதாக அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் டாக்டர் சைப் அல் தஹ்ரி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் 30 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழிபாட்டிற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்கள் வசிக்கும் தொழில்துறை பகுதிகள், தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பொது பூங்காக்கள் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட மசூதிகள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள், வயதானவர்கள், 12 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வழிபாட்டு தலங்களுக்கு செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவின் பாதிப்பினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இன்று வரையிலும், பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வருவதை தொடர்ந்து அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தளர்வு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.