அபுதாபி : கார்னிச் பீச், ஹுதைரியாத் பீச், கலிஃபா பார்க் திறப்பு..!! முன் அனுமதி மற்றும் COVID-19 நெகடிவ் அவசியம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நாளை (ஜூலை 3) முதல் சில குறிப்பிட்ட பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படும் என்று அபுதாபியின் நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில், அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா மாகாணங்களில் உள்ள சில பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு நுழைவதற்கு ஸ்மார்ட்ஹப் இயங்குதளத்தின் smarthub.adm.gov.ae மூலம் முன்பதிவு தேவை என்றும், மேலும் பார்வையாளர்கள் தங்களின் COVID19 நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் டை உறுதி செய்யும் விதமாக தங்கள் ஸ்மார்ட்போன்களில் AL HOSN அப்ளிகேஷனில் அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கூறுகையில், இந்த இடங்களுக்கு செல்லும் போது பார்வையாளர்கள் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் 40 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
முனிசிபாலிடி அறிவித்துள்ள இந்த முடிவானது அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறைக்கு உட்பட்ட அனைத்து பொழுது போக்கு நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாகும் என்றும் அடுத்தடுத்த கட்டங்கள் அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் திறக்கப்பட இருக்கும் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், 4 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் திறக்கப்படும் பூங்காக்கள்
- உம் அல் எமரத் பூங்கா (அபுதாபி)
- கலீஃபா பூங்கா (அபுதாபி)
- அல் சுலைமி பூங்கா (அல் அய்ன்)
- மதினத் சயீத் (அல் தஃப்ரா)
பூங்காக்கள் திறக்கப்பட்டாலும் பூங்காக்களில் அமைந்துள்ள விளையாட்டு பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் திறக்கப்படும் கடற்கரைகள்
- ஹுதைரியாத் கடற்கரை (அபுதாபி)
- கார்னிச் கடற்கரை (அபுதாபி)
- அல் மிர்ஃபா கடற்கரை (அல் தஃப்ரா)
பீச் மற்றும் பூங்காக்களில் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பதும் குறிபிடத்தக்கது.