ஷார்ஜாவிற்கும் கோவைக்கும் இடையே சிறப்பு விமானங்கள் இயக்கும் ஏர் அரேபியா..!! கோவைக்கு செல்லவும் ஷார்ஜாவிற்கு திரும்பவும் டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கையான வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சில நாட்களுக்கு முன்பாக தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விமானங்களின் மூலமாகவும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பல தனியார் அமைப்புகள் இந்தியாவிற்கு சொந்தமான மற்றும் அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசானது ஜூலை 12 ம் தேதி முதல் 26 ம் தேதி வரையிலான நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களே தங்களின் விமானங்கள் மூலம் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
அதனடிப்படையில், அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கும் எதிஹாட் விமான நிறுவனமானது ஜூலை 12 ம் தேதி முதல் 26 ம் தேதி வரையிலான நாட்களில் சென்னை உட்பட இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களுக்கு விமானங்களை இயக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்நிறுவனம் சென்னைக்கு வாரத்திற்கு 5 நாட்கள் விமான சேவைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து அமீரகத்தின் ஷார்ஜாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏர் அரேபியா விமான நிறுவனமும் தமிழகத்திற்கு சிறப்பு விமானங்களை இயக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, ஏர் அரேபியா நிறுவனமானது ஷார்ஜாவிலிருந்து கோவைக்கும் கோவையிலிருந்து ஷார்ஜாவிற்கும் விமான சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்லும் விமானங்கள் ஜூலை 15, ஜூலை 19, ஜூலை 22, ஜூலை 26 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக ஏர் அரேபியாவின் அதிகார பூர்வ டிக்கெட் புக்கிங் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய நாட்களில் இயக்கப்படவிருக்கும் விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல், இதே விமானங்களில் இந்தியாவிற்கு செல்லும் பயணிகளை அமீரகத்தில் இருந்து ஏற்றிச் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திற்கு சொந்தமான மற்ற விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் ஃபிளைதுபாய் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தியாவின் மற்ற நகரங்களான மும்பை, டெல்லி, கொச்சி, திருவனந்தபுரம் போன்றவற்றிற்கே விமான சேவைகளை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளன. அவை தமிழகத்திற்கு சிறப்பு விமான சேவையை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.