அமீரக செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதன் முறையாக துபாயில் பொது பேருந்துகளை இயக்கும் பெண் ஓட்டுநர்கள்..!!

துபாயில் பொது பேருந்து சேவைகளை இயக்கிவரும் RTA பேருந்துகளில், முதன் முறையாக மூன்று பெண் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க பணியமர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பெண் ஓட்டுனர்களை கொண்ட முதல் குழு தங்களது பணியை தொடங்கிவிட்டதாகவும் RTA கூறியுள்ளது. இதன் மூலம் துபாயில் பொது பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டு இதுவரையிலும் ஆண்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி வந்த நிலையில், முதன் முறையாக இந்த துறையில் பெண்களும் தற்பொழுது கால் பதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RTA மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதல் முறையாக பெண் ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் இந்த முயற்சியை மேற்கொண்ட முதல் நிறுவனம் RTA என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து RTA வின் பொது போக்குவரத்து அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஹாஷிம் பஹ்ரோஜியன் அவர்கள் கூறுகையில், “இந்த நடவடிக்கை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில் பெண்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “மத்திய கிழக்கு நாடுகளிலேயே RTA தான் இந்த முயற்சியை முதன் முறையாகத் தொடங்கியிருக்கிறது. பெண்களை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு வேலைகளில் பாலின சமநிலையை அடைதல் என்ற RTA கொள்கையுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளை இயக்கும் பெண் ஓட்டுனர்களின் மூன்று வழித்தடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பேருந்து எண் 77 : பனியாஸ், தேரா சிட்டி சென்டர், டெர்மினல் 1, மற்றும் டெர்மினல் 3
  • பேருந்து எண் F 36 : மால் ஆஃப் தி எமிரேட்ஸ், துபாய் அறிவியல் பூங்கா மற்றும் அல் பார்ஷா சவுத் இடையே மெட்ரோ இணைப்பு
  • பேருந்து எண் F 70 : புர்ஜுமான், பர் துபாய் மற்றும் அல் ஃபஹிதி இடையே மெட்ரோ இணைப்பு

RTA-வில் ஏற்கெனவே 165 பெண் டாக்ஸி ஓட்டுனர்கள், 41 பெண் லிமோசின் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பெண் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஆகியோரும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!