தனியார் மற்றும் பொது துறைகளுக்கு ஈத் விடுமுறை நாட்களை அறிவித்த சவூதி அரேபியா மற்றும் குவைத்..!!
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ம் நாளன்று ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும். தற்பொழுது இந்த வருடத்தில் வரும் ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்பட இருப்பதாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன. எனவே, ஈத் அல் அத்ஹாவிற்கான அரசு மற்றும் தனியார் துறைக்கான விடுமுறை நாட்களை வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
சவூதி அரேபியா
சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Saudi Ministry of Human Resources and Social Development) நாட்டில் இருக்கும் பொது மற்றும் தனியார் துறைக்கான ஈத் விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுத்துறைக்கு இரண்டு வார விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுத்துறை ஊழியர்கள் பணிகள் மீண்டும் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு ஜூலை 30, வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை என நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்
குவைத்தில் இருக்கும் சிவில் சேவை கமிஷன் வெளியிட்ட அறிவிப்பின் படி, அந்நாட்டில் பணிபுரியும் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 30, வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி திங்கள்கிழமை வரை என ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், அமீரகத்தில் வரும் ஜூலை 30 ம் தேதி வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை என நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.