அமீரகத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய மகளிர் சங்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பால் வேலையிழந்து வாடும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து இந்திய மகளிர் சங்கம் (Indian Ladies Association – ILA) உதவியுள்ளதாக அதன் தலைவர் சுனிதா வாக்லே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் இந்தியன் மகளிர் சங்கம் பெருமிதம் அடைகிறது. கொரோனாவின் தாக்கத்தினால் வேலை இழப்பு மற்றும் மாத சம்பளம் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மளிகை, உணவு பொருட்கள், பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றை விநியோகிப்பதில் இந்திய மகளிர் சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “மகளிர் சங்கத்தின் மூலமாக வெவேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம். அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு தேவைப்படக்கூடிய நாப்கின்ஸ், பழங்கள், பால் போன்றவற்றையும் நாங்கள் வழங்கி வருகிறோம் என்றும், மேலும் தொழிலாளர் குழுக்கள், பணிப்பெண்கள், பார்லர் உதவியாளர்கள், பராமரிப்பாளர்கள், காவலாளிகள், சிறிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட சில குடும்பங்கள் போன்றவர்களுக்கும் எங்கள் சங்கத்தின் மூலமாக உதவிகளை வழங்கியுள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து ILA இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணவு, முக கவசங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது வேலை இழந்தவர்கள் மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களை கொண்டிருப்போர் என பலரும் அவர்களின் தாய்நாட்டிற்கு சென்று விட்டதால் உதவிக்கான கோரிக்கைகள் குறைந்து விட்டதாகவும் சுனிதா தெரிவித்துள்ளார்.
இந்த நற்பணிக்கு பெரிதும் துணை இருந்த LULU எக்ஸ்சேஞ்ச், தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் அனைவர்க்கும் ILA தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.