ஏர் இந்தியாவை தொடர்ந்து இந்தியர்களை ஏற்றி செல்ல அமீரக விமானங்களுக்கும் அனுமதி..!! இந்திய அரசு ஒப்புதல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் மற்றும் அமீரகத்தில் பணிபுரிந்துவந்தவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக அமீரகம் திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வந்த நிலையில், தற்பொழுது ICA மற்றும் GDRFA அனுமதி பெற்றவர்கள் வந்தே பாரத் திட்டம் மூலமாக இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் அமீரகம் செல்லலாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏர் இந்தியா விமான நிறுவனமும் வந்தே பாரத் திட்டத்தில் இயக்கப்படும் விமானங்களில் அமீரகம் பயணிக்க, ஜூலை 12 முதல் ஜூலை 26 வரையிலான 15 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமல்லாது அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் இந்தியாவிற்கு இயக்கப்படும் சார்ட்டர் விமானங்களின் வாயிலாகவும் இந்திய குடிமக்கள் அமீரகம் திரும்ப இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீரக விமான நிறுவனங்களின் மூலம் இந்தியாவிற்கு சார்ட்டர் விமானங்கள் இயக்க இந்திய அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Information issued by MoCA on repatriation flights to UAE. pic.twitter.com/Dnq2X6iNKG
— MoCA_GoI (@MoCA_GoI) July 9, 2020
இது குறித்து இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் எமிரேட்ஸ், எதிஹாட் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக கேரியர்களால் இயக்கப்படும் சார்ட்டர் விமானங்களும், ICA அனுமதி பெற்ற ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமீரகம் திரும்ப ICA மற்றும் GDRFA அனுமதியை பெற்றிருந்தும், அமீரகம் திரும்ப விமான சேவை தொடங்கப்படாமல் இருந்ததனால் கவலை அடைந்திருந்த பலரும் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
விமான டிக்கெட் முன்பதிவு குறித்து துபாயில் உள்ள ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், அமீரகத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் திட்டத்தின் அனைத்து திருப்பி அனுப்பும் விமானங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமீரகத்தில் உள்ள டிராவல் ஏஜென்டுகள் மூலமாகவும் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் அமீரகத்திற்கு சொந்தமான விமானங்களில் அமீரகம் திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#FlyAI : Important Information for ICA approved UAE residents who wish to travel to UAE on Vande Bharat Mission flights. pic.twitter.com/bvN3dd8DkK
— Air India (@airindiain) July 9, 2020