குவைத் : மூன்று வாரங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் இயக்கப்பட்ட சிறப்பு விமானம்..!! சென்னைக்கும் ஏற்பாடு என தகவல்..!!
கொரோனாவின் பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்பி கொண்டிருக்கும் வேளையில், குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த விமான சேவையில் குவைத்தில் இருந்து இந்தியாவின் டெல்லி மற்றும் விஜயவாடா விமான நிலையத்திற்கு தற்போது விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருக்கும் அல் தாயர் குரூப் மற்றும் லக்ஸரி ட்ராவல்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விமானத்தின் மூலம் 322 பயணிகள் குவைத்தில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய காலங்களில் இதே போன்று, சென்னை, கொச்சி, ஹைதெராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், அல் ஜசீரா ஏர்வேஸ் விமானம் மூலம் குவைத்தில் இருந்து 162 பயணிகள் விஜயவாடாவிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் இருந்து குவைத் வருவது குறித்தான பயண விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.