GDRFA ஒப்புதலுடன் அமீரகத்தின் எந்த விமான நிலையத்திற்கும் பயணிக்கலாம்..!! கட்டுப்பாடுகள் நீக்கம்..!!
வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள், GDRFA ஒப்புதல் மற்றும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருந்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எந்தவொரு விமான நிலையத்தின் மூலமாகவும் துபாய் திரும்பலாம் என்று துபாயின் GDRFA பொது இயக்குனர் மேஜர் ஜெனெரல் முகம்மது அல் மர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அபுதாபி விமான நிலையம் வர ICA ஒப்புதல் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் துபாய் அரசு ஊடக அலுவலகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தங்களின் சந்தேகங்களை அரசின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள உதவும் விதமாக askDXBOfficial எனப்படும் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விர்ச்சுவல் உரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த துபாயின் GDRFA பொது இயக்குனர் மேஜர் ஜெனெரல் முகம்மது அல் மர்ரி அவர்கள், தற்பொழுது நாட்டிற்கு வெளியே செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் எனவும், அதே போல் அமீரகத்திற்கு வெளியே 6 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களும் அமீரகம் திரும்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வேலை இழந்து நாடு திரும்ப முடியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அபராதம் விதிக்கப்பட்ட அனைவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என நினைக்க வேண்டாம். துபாய் விமான நிலையங்களிலும் GDRFA மூலமாகவும் நாங்கள் மனிதாபிமான வழக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு நபரின் நிலைமையையும் கையாண்டு அவர்களின் பயணத்தை எளிதாக்குவோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், துபாய் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை தினசரி சராசரியாக 5 சதவீதம் உயர்ந்து வருவதாக GDRFA துபாயின் தலைவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பயணிகள் போக்குவரத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காணப்படட அளவிற்கு மீண்டும் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.