அமீரக செய்திகள்

UAE : ஒரே நாளில் அடுத்தடுத்து உணவகங்களில் ஏற்பட்ட விபத்து..!! ஒருவர் பலி..!!

துபாயின் இன்டர்நேஷனல் சிட்டியில் (International City) அமைந்திருக்கும் நான்கு மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாயுக்க்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உணவகத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களை பாதுகாப்பு கருதி கட்டிடத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் இந்த தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் துபாய் சிவில் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அபுதாபியில் இன்று காலை ஒரு உணவகத்தில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. ஷேக் ரஷீத் பின் சயீத் சாலையில் (Abudhabi Airport Road) அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் திடீரென்று ஏற்பட்ட சத்தத்துடன் கூடிய வெடிப்பில் அந்த உணவகமானது பலத்த சேதமடைந்துள்ளது. உணவகத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவின் காரணமாக இந்த விபத்து (Gas Explosion) நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திடீர் வெடிப்பு ஏற்பட்ட காரணத்தினால் உணவகத்தில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் சிதறிக்காணப்படுகின்றன. விபத்து நிகழ்ந்ததும் அந்த இடத்திற்கு அபுதாபி காவல்துறையினரும் துணை மருத்துவர்களும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்துள்ளனர்.

மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நிகழ்ந்ததையொட்டி அந்த சாலையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உணவகத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!