அமீரக செய்திகள்

UAE: ஊதியம் சரிவர வழங்கப்படவில்லையா?? தொழிலாளர் நீதிமன்றத்தில் புகாரளிப்பது எப்படி?? சிறு குறிப்பு..!!

அமீரகத்தில் ஊழியர்கள் தங்களின் வேலை நேரத்தை விட கூடுதல் நேரம் ஊதியம் இன்றி வேலை செய்தாலோ அல்லது நிறுவனமானது ஊழியர்களை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்திருந்தாலோ, ஊழியர்கள் தங்களின் குறைகளை அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திற்கு (MoHRE) தெரியப்படுத்தி புகார் அளிக்கலாம்.

அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சகமானது முதலாளி-தொழிலாளர் இடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கிறது. இந்த இரு தரப்பினரிடையே ஏதேனும் சிக்கல் ஏற்படுமானால் அமீரக தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் வழங்குகிறது.

ஊழியர்கள் தங்களின் முதலாளி அல்லது நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்க விரும்பினால், பின்பற்ற வேண்டிய படிகள்

புகாரை தாக்கல் செய்யும் முறைகள்

பின்வரும் ஏதேனும் ஒரு விருப்பத்தை தேர்வு செய்து தொழிலாளர்கள் தங்களின் புகாரை அளிக்கலாம்.

  • அமைச்சகத்தின் ஹாட்லைன் எண்ணான 800 60 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம்.
  • MOHRE அப்ளிகேஷனை தங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்து அந்த அப்ளிகேஷன் மூலம் தொழிலாளர் தங்களின் புகாரைத் தாக்கல் செய்யலாம்
  • www.mohre.gov.ae என்ற வலைதளத்தில் சென்று தொழிலாளர் புகாரைத் தாக்கல் செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து புகார் அளிக்கலாம்.

தொழிலாளர்கள் மொபைல் அப்ளிகேஷன் அல்லது வலைதளத்தில் சென்று புகார் அளிக்க விரும்பினால் தங்களுக்கென ஒரு அக்கவுன்டை உருவாக்க வேண்டும். அதற்கு பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் பணி அனுமதி (தொழிலாளர் அட்டை) எண் தேவைப்படும்.

தொழிலாளர்கள் தங்களின் புகாரை தாக்கல் செய்தவுடன் Twa-fouq centre என்ற மையத்தின் ஒரு சட்ட ஆலோசகரிடம் இருந்து 72 மணி நேரத்திற்குள் அழைப்பு வரும். அவர்கள் ஆரம்பத்தில் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.

இந்த செயல்முறைக்கு ஊழியரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

Twa-fouq centre என்றால் என்ன?

Twa-fouq centre என்பது MOHRE ஆல் உரிமம் பெற்ற சேவை மையம் ஆகும். இந்த சேவை மையமானது ஒரு முதலாளி அல்லது ஒரு பணியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தொழிலாளர் புகார்களைப் பெற்றுக்கொண்டு அந்த புகார்களை விசாரித்து, ஒப்புதலுக்காகவும், பிரச்சனைக்கான தீர்வை முடிவெடுப்பதற்கும் அல்லது வழக்கை நீதித்துறையிடம் குறிப்பிடுவதற்கும் MOHRE-க்கு பரிந்துரைகளை வழங்குகிறது.

மேலும், இது சட்ட ஆலோசனைகளையும் பணி தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்களையும் வழங்குகிறது

தொழிலாளர் புகாரை பதிவு செய்வதற்கான நடைமுறை

ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் 6 வது பிரிவின் அடிப்படையில், தொழிலாளர் புகார்களை அமைச்சகம் கீழ்க்கண்டவாறு கையாளுகிறது.

  • தொழிலாளர் தங்களின் புகாருக்கான விண்ணப்பங்கள் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.
  • பின்னர் சம்பந்தப்பட்ட Twa-fouq centre இரு தரப்பினரையும் அழைத்து, பிரச்சனையை இணக்கமாக தீர்ப்பதற்கு அவசியமானதாக கருதும் நடவடிக்கையை எடுக்கும். இந்த சேவை மையம் தெரிவிக்கும் முடிவை தொழிலாளர் அல்லது முதலாளி கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • இரு தரப்பினரிடையே ஒரு இணக்கமான தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளரிடம் இருந்து கோரிக்கையைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள், அந்தத் பிரச்சனையை சம்பந்தப்பட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • குறிப்பிடப்பட்ட வழக்கு சர்ச்சையின் சுருக்கம், வழக்கு தொடர்பான இரு தரப்பினரின் சான்றுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறையின் கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய குறிப்பானையுடன் (MEMO) தொழிலாளர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விட வேண்டும்.
  • நீதிமன்றம், கோரிக்கையைப் பெற்ற நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள், உரிமைகோரலுக்கான விசாரணை நடைபெறும் நாளினை உறுதி செய்து இரு தரப்பினருக்கும் அறிவிக்கும்.
  • தொழிலாளர் நீதிமன்றம் (Labour Court), இந்த வழக்கு தொடர்பாக தொழிலாளர் துறையின் (Labour Department) பிரதிநிதியை ஆஜராகி, நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த மெமோவின் உள்ளடக்கங்களை விளக்குமாறு கோரலாம். இருதரப்பு விசாரணைக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும்.

தொழிலாளர் வழக்கு தாக்கல் செய்வதற்காக செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணம் எவ்வளவு?

  • 100,000 திர்ஹம் வரையிலான உரிமைகோரல்களுக்கு, தொழிலாளர் நீதிமன்றக் கட்டணங்களை செலுத்தத் தேவையில்லை.
  • 100,000 திர்ஹமிற்கும் அதிகமான உரிமைகோரல்களுக்கு, தொழிலாளர் தங்களின் உரிமைகோரல் தொகையிலிருந்து ஐந்து சதவீதத்தை செலுத்த வேண்டும், அதிகபட்ச கட்டணம் 20,000 திர்ஹம் வரை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டி வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!