தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத்திற்குள் நுழைய விதிமுறைகளை வெளியிட்ட DGCA..!!
குவைத் நாட்டில் கொரோனாவின் பாதிப்பினால் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையானது ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும், கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா, இலங்கை, மெக்ஸிகோ, சிங்கப்பூர், இந்தோனேசியா, லெபனான் போன்ற குறிப்பிட்ட 31 நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டிற்குள் நுழைய குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும், அவர்கள் ட்ரான்சிட் விமானங்கள் மூலமாகவும் குவைத் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.
இந்நிலையில், தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளை சேர்ந்த பயணிகள், குவைத் அரசு தடை விதிக்காத நாடுகளில் குவைத் வருவதற்கு முன்னதாக குறைந்த பட்சம் 14 நாட்கள் தங்கியிருந்தால் அவர்கள் கொரோனாவிற்கான PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நாட்டிற்குள் நுழையலாம் என்று குவைத் நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் படி, பயணிக்கும் நபர்கள் கொரோனாவிற்கான பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் குவைத் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.