குவைத் : விசிட் விசாவில் இருந்து ரெசிடென்ஸ் பெர்மிட்டாக மாற்றிக்கொள்ள தடை..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டில் வெளிநாட்டினர் மற்றும் அந்நாட்டு குடிமக்களின் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்து அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் குடிமக்களின் எண்ணிக்கை 70 சதவீதமாகவும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 30 சதவீதமாகவும் மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, அந்நாட்டின் அனைத்து வகையான விசிட் விசாக்களையும் ரெசிடென்ஸ் பெர்மிட்டாக மாற்ற தடை விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சில குறிப்பிட்ட மனிதாபிமான அடிப்படையிலான வழக்குகளின் அடிப்படையில் மட்டும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் சில விசாக்கள் மாற்ற அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குவைத்தில் விசிட் விசாவில் இருப்பவர்கள் தங்களின் விசாவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இருப்பினும் விசிட் விசாவினை ரெசிடென்ஸ் பெர்மிட்டாக மாற்ற விரும்பும் நபர்களுக்கு இந்த புதிய விதிமுறையானது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, குவைத் நாட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ள புதிய ரெசிடென்ஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் மாற்றங்களின் கட்டமைப்பிற்குள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சர்வதேச விமானப் போக்குவரத்து தடையினால் இலவசமாக நீட்டிக்கப்பட்ட காலாவதியான விசாக்களின் செல்லுபடி காலம் ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடைவதாகவும், அதற்குப்பிறகு செல்லுபடி காலம் நீட்டிக்கப்படாது என்றும் அறிவித்திருந்தது. தற்பொழுது விசிட் விசாவில் இருப்பவர்கள் தங்களின் செல்லுபடி காலத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் இல்லையெனில், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் குவைத் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.