VBM5 : இந்தியா, அமீரகம் இடையே 400 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் அறிவிப்பு..!!

இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலான வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவிற்கு இடையே 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இயக்கப்பட்டு வரும் விமான சேவைகளானது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மட்டுமல்லாது, இந்தியாவில் சிக்கி தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களையும் அமீரகத்திற்கு திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொள்வதால் இரு நாடுகளிலும் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இது மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கின்றது. மேலும், இந்தியாவில் இருந்து சென்னை, திருச்சி, கோழிக்கோடு, மங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, புது தில்லி, ஹைதராபாத், டெல்லி, கண்ணூர் மற்றும் கொச்சி போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் அவர்கள் இந்தியாவில் அனைத்து வகையான செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருக்கும் நபர்களும் அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் பயணிக்கலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து, புதிய விசாக்கள் வைத்திருக்கும் நபர்களும் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.
ICA ஒப்புதல் தேவையில்லை
அதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய, அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஆகியவை ஒன்றிணைந்து அமீரகம் வரும் குடியிருப்பாளர்கள் ICA விடம் ஒப்புதல் பெற தேவையில்லை என்று நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்தன. இதன்மூலம், இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்களுக்கு விமானப்பயணமானது எளிதாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ICA ஆகஸ்ட் 11 முதல் காலாவதியான நுழைவு அனுமதி மற்றும் விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற ஒரு மாதத்திற்கு கூடுதல் சலுகை காலம் அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளானது இரு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.