ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!! இரவு நேர இயக்கத்திற்கான தடை நீக்கம்..!!
ஓமானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்களின் நடமாட்டத்தைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று (ஆகஸ்ட் 15) காலையுடன் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு இரவு நேர ஊரடங்கு உத்தரவின் மூலம் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகளின் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் உச்சக் குழுவின் அறிவுறுத்தலின் படி கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வணிக விற்பனை நிலையங்கள், அடிக்கடி கைகளை கழுவுதல், அங்கீகரிக்கப்பட்ட சானிடிசர்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூகக் கூட்டங்களில் இருந்து விலகி இருப்பது மற்றும் இது போன்ற உச்சக்குழு அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் 93.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும், கொரோனாவினால் 82,743 பேர் பாதிக்கப்பட்டும் 77,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.