கோழிக்கோடு விமான விபத்து மீட்புப் பணியின் ரியல் ஹீரோ..!! முதல் ஆளாய் சென்று ஏழு பேரை மீட்ட தனி ஒருவர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்தை அடைந்ததும் ஓடுபாதையை விட்டு விலகி சென்று 35 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் விமானமானது இரண்டு துண்டாக உடைந்தது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் இந்திய அரசின் நடவடிக்கையாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட அந்த விமானத்தில் 191 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தும் 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை கோழிக்கோடு விமான நிலைய பகுதியில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போது, நிகழ்ந்த இந்த விமான விபத்தை விமான நிலையத்திற்கு அருகில் மளிகை கடை வைத்திருக்கும் 35 வயதான ஜுனைத் முகூத் இந்த சம்பவத்தை நேரில் கண்டுள்ளார். உடனேயே விபத்து நிகழ்ந்த இடத்திற்கு முதல் ஆளாக விரைந்து சென்று விபத்தில் சிக்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உட்பட 7 பேரை தனிநபராக அவர் மீட்டுள்ளார்.
இது குறித்து ஜுனைத் அவர்கள் ஊடகத்திற்கு தெரிவிக்கையில், “எனது வீடு விமான நிலையத்தின் வெளிப்புற சுவற்றிலிருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளிக்கிழமை, இரவு 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரையிலான நேரங்களில் (இந்திய நேரப்படி), ஒன்றன் பின் ஒன்றாக வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே, நான் எனது வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தேன். அப்பொழுது ஒரு விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி கீழே விழுந்ததைக் கண்டேன். அப்பொழுது அந்த இடத்தில் மழை பெய்து கொண்டிருந்தது”.
“விமான விபத்தை நேரில் கண்ட நான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் அந்த நேரத்தில் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் குறிப்பாக நான் கொரோனாவை பற்றி கூட நினைக்க முடியாத சூழலில் இருந்ததால் முக கவசங்கள் அல்லது கையுறைகளை அணிவது பற்றி எந்த எண்ணமும் இல்லை. விபத்து நிகழ்ந்த ஐந்து நிமிடங்களுக்குள் நான் அந்த இடத்தை அடைந்திருந்தேன்” என்று கூறினார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஜுனைத் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “விபத்து ஏற்பட்டதை கண்டவுடன் நான் எனது அண்டை வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததும் அவர்களும் மீட்புப் பணிக்காக தங்களது வாகனங்களுடன் வந்து சேர்ந்தனர். அத்துடன், நான் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, தீ விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வாகனங்களின் என்ஜின்களை அணைக்கச் சொன்னேன். நான் மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கு வந்தபோது, விமானம் இரண்டு துண்டாக உடைந்திருப்பதைக் கண்டேன். விமானத்தின் காக்பிட் (Cockpit) பகுதியானது விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி இருந்தது. மேலும், அந்த விமானத்தை ஓட்டிய விமானிகள் இருவரும் காக்பிட் உள்ளே சிக்கிக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக ஓடுபாதைக்கு செல்லக்கூடிய ஒரு வாயில் பூட்டப்பட்டு இருந்தது. நான் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறி வாயிலை திறக்கச் சொன்னேன். பாதுகாப்பு காரணங்களால் அதை திறக்க அவர் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், பெரிதும் சேதமடைந்த விமானத்தின் அருகில் சென்றபோது, உள்ளே இருந்து ஏராளமான அழுகுரல்களை கேட்க முடிந்தது.
“நான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பினேன், ஆனால் கேட் திறந்த பிறகும், பாதுகாப்பு அதிகாரி எங்களை விமானத்தின் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் ஒரு டிரைவர் மற்றும் மற்றொரு நபருடன், ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு மீட்புக் குழு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்த குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நபர்கள் போதாது என்றும் நாங்கள் உதவ விரும்புகிறோம் என்றும் கேட்டோம். அதனை தொடர்ந்து அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு எங்களை மீட்புப்பணியில் ஈடுபட அனுமதித்தனர். விமானம் இரண்டாக உடைந்திருந்ததால், பயணிகளில் பெரும்பாலோர் விமானத்திலிருந்து வெளியே விழுந்து பலத்த காயம் அடைந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அது ஒரு சவாலான சூழ்நிலையாக இருந்தது. விமானத்தில் இருந்த சாமான்கள் மற்றும் பிற உடமைகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தன. நான் விமானத்தின் உள்ளே ஓடி, மக்கள் தங்கள் சீட் பெல்ட்களை கழற்றிவிட்டு வெளியேற உதவ ஆரம்பித்தேன். நான் விமானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தபோது, நான் பலத்த காயம் அடைந்த ஒரு சிறுமியைக் கண்டேன்”.
“அந்த சிறுமி விபத்தினால் மயக்கமடைந்த பெற்றோருக்கு அருகில் அழுது கொண்டிருந்தாள். முதலில் நான் பலத்த காயங்களுடன் இருந்த அந்த சிறுமியையும் அதனுடன் படுகாயமடைந்த மற்ற ஆறு பேரையும் ஆம்புலன்சிற்கு கொண்டு சென்றேன். அதன் பின்னர் அந்த சிறுமியின் பெயர் ஈசா பாத்திமா என்றும் அந்த சிறுமி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரது தாயும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் அந்த சிறுமியின் தந்தை ஷராபு பிலாசேரி அவர்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது”
“மேலும், போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லாததால் எனது நண்பர்களும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்களும் தங்கள் சொந்த வாகனங்களில் விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏறக்குறைய 75 சதவீத பயணிகள் தனியார் வாகனங்களில்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற எம்.எல்.ஏ வந்து மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்தார்” என்றும் தெரிவித்தார்.
மீட்புப்பணியில் ஈடுபட்ட ஜுனைத் கைக்குழந்தையுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேரை விமான விபத்திலிருந்து மீட்டுள்ளார். தற்பொழுது அவரும் அவருடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அவரது அண்டை வீட்டார் 8 பேருடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.