2020 ம் ஆண்டிற்கான சர்வதேச பாதுகாப்பு விருதை வென்ற சவூதி ரயில்வே நிறுவனம்..!!
பாதுகாப்பு மற்றும் உயர்ந்த தரங்களின் அடிப்படையில், சவூதி அரேபியாவின் சவூதி ரயில்வே நிறுவனமானது (SAR) 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாதுகாப்பு விருதை வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் சர்வதேச பாதுகாப்பு விருதை இரண்டாவது முறையாக இந்நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணியிடத்தில் பாதுகாப்பிற்கான உயர்தரங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்துதல், அபாயம் மற்றும் காயங்களில் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறந்து பணியாற்றி வருவதற்காக இந்த விருது பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SAR இன் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் பஷர் பின் காலித் அல்-மாலிக் அவர்கள் கூறுகையில், “சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் முடிவுகளை பிரதிபலிக்கும் இத்தகைய சர்வதேச விருதுகளை எங்கள் நிறுவனம் பெற்றிருப்பது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.