ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படும் வாய்ப்பு..??

Published: 24 Aug 2020, 9:51 AM |
Updated: 24 Aug 2020, 9:55 AM |
Posted By: admin

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குடியிருப்பாளர்கள் கடைப்பிடிக்காவிட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் கட்ட நிலை ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஒபைத் அல் ஹுசன் அல் ஷம்ஸி அவர்கள் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் இது குறித்து தொலைக்காட்சி நேர்காணலில் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுநோயானது இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை என்றால், இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் மீண்டும் சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக சிக்கி தவித்த அமீரக குடியிருப்பாளர்கள் தற்பொழுது அமீரகத்திற்கு மீண்டும் திரும்பி வருவதும் அமீரகத்தில் சமீபத்திய நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஒரு காரணம் என்றும் அல் ஷம்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதன் காரணமாக நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே எதிர்பார்த்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அமீரகத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் குடியிருப்பாளர்களை முகவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறு வலியறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT