அமீரக செய்திகள்

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வீட்டு தனிமைப்படுத்தலை ரத்து செய்த அபுதாபி.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இதுவரையில் கொரோனா பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெறும் நபர்கள், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் முறையாக வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். வீட்டு தனிமைப்படுத்தலின் விதிகளை மீறும் நபர்கள் மேல் தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்பொழுது இந்த நிலையை மாற்றி கொரோனா பரிசோதனையில் நேர்மறை (Positive) முடிவைப் பெறும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் கள மருத்துவமனைகள் அல்லது ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தற்பொழுது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரையிலும் பின்பற்றப்பட்டு வந்த வீட்டு தனிமைப்படுத்தல் முறையானது இனி கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு புதிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதிய வழிமுறைகளின் படி, கொரோனாவிற்கான பரிசோதனையில் நேர்மறை முடிவை பெற்று அறிகுறி இல்லாமலும் அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இனி கொரோனா பரிசோதனையில் எதிர்மறை (negative) முடிவைப் பெறும் வரை அபுதாபியில் இருக்கும் கள மருத்துவமனைகள் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலை மேற்பார்வையிடும் அரசாங்க அதிகாரிகள் இந்த புதிய நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அபுதாபி பொது சுகாதார மையத்தில் இருக்கும் ஒரு மருத்துவர் ஷாதா அல் கசாலி அவர்கள் கூறுகையில், “கொரோனா பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெறும் நபர்களை வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் திட்டம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. இனி அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தளங்கள் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த முடிவானது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அபுதாபி மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புள்ள அனைவருமே கண்காணிக்கப்படுவதையும், சமூகத்தில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதையும் இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது என்று அபுதாபியின் புதிய முடிவு குறித்து மருத்துவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அபுதாபி அரசானது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இதனால் அபுதாபியில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் தற்பொழுது கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள.

அபுதாபி தேசிய கண்காட்சி மைய கள மருத்துவமனையானது 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து கடந்த ஜூன் மாதத்தில் அக்கள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதன் கடைசி நோயாளியும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியதாக தெரிவித்தது.

அதே போல், பொது மருத்துவமனை ஆபரேட்டர் SEHA-வால் நடத்தப்படும் பல மருத்துவமனைகள் கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டன இதில் ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி, அல் தவாம் மருத்துவமனை மற்றும் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆகியவை அடங்கும்.

அபுதாபி சிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தில் தங்களது மருத்துவமனைகளில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியதால் அவை கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டன. இதனால், புதிதாக கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

அது மட்டுமல்லாது, அபுதாபியில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் அதிகாரிகள் நேரில் சென்று குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர். மேலும், அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபி வருபவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்தால் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!