அமீரக செய்திகள்

விசிட் / டூரிஸ்ட் விசாவில் அமீரகத்திற்கு வேலை தேடி வர வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாவிற்கான தேவைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் அமீரகத்தில் வேலை தேடி வந்த நூற்றுக்கணக்கான நபர்கள் நாட்டிற்குள் நுழைய முடியாமல் துபாய் விமான நிலையத்திலேயே சிக்கி தவித்த நிகழ்வு ஒன்று சமீபத்தில் நிகழ்ந்தது. விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகத்திற்கு வருவதற்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கியதனை தொடர்ந்து, விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களில் வேலை தேடி துபாய் வரும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா / விசிட் விசாக்களில் அமீரகம் வந்த பயணிகள் சந்தித்த பிரச்சினைக்கு பதிலளித்த துபாயில் உள்ள இந்திய தூதரகம் இந்த விசாக்களில் வேலை தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை இந்த விசாக்களில் பயணித்த சுமார் 300 இந்திய பயணிகள் அதிகாரிகள் அறிவித்த விதிகளுக்கு இணங்காததால் விமான நிலையத்திலேயே சிக்கி தவித்ததாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. “சுமார் 80 பேர் பின்னர் அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். தற்பொழுது, ​​49 பேர் இன்னும் விமான நிலையத்தில் உள்ளனர். இன்றிரவு அல்லது நாளைக்குள் அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப முயற்சிக்கிறோம். ஆனால் விமானங்கள் உடனடியாக கிடைக்கவில்லை” என்று தூதரக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

தற்பொழுது விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்கள் மற்றும் இம்மிகிரேஷன் கவுண்டர்கள் என இரண்டு சோதனைச் சாவடிகள் உள்ளன. சுற்றுலா விசாவில் பயணித்தவர்கள் அமீரகத்திற்கு வேலை தேடி வந்திருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தால் அவர்கள் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாக்களில் அமீரகத்திற்கு வருபவர்கள் செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு மற்றும் தங்கள் கையில் தேவையான பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாக்களில் உண்மையான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருவதை உறுதி செய்வதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. “நீங்கள் ஒரு குறிப்பிட்ட விசா பிரிவில் அமீரகத்திற்கு பயணித்தால் நீங்கள் அந்த விசாவிற்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எந்தவொரு நாடும் பயணிகளை முறையான ஆவணங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளாது. இம்மிகிரேஷன் அதிகாரிகளின் விதிகளை நாம் மதிக்க வேண்டும். யாரும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் அல்லது சுற்றுலா விசாவில் வேலை தேடி வர வேண்டாம்” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

துபாய்: இந்தியாவிலிருந்து விசிட் / சுற்றுலா விசாவில் வருவோர் கவனத்திற்கு..!! 2,000 திர்ஹம்ஸ் பணம் கையில் இருக்க வேண்டும் எனவும் தகவல்..!!

இ-மைக்ரேட் e-Migrate ஆன்லைன் ஆட்சேர்ப்பு போர்டல் (e-Migrate online recruitment portal) மூலம் மட்டுமே இந்திய (Blue-Collar) தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்றும் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் சக இந்தியர்கள் முறையான விசாக்களில் அமீரகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகளாக இருந்தால், அமீரகத்தில் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமான வழிமுறைகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சுற்றுலாவைத் தவிர வேறு நோக்கத்திற்காக அமீரகம் வருகிறார்கள் என்றால், சரியான விசாவைப் பெறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான நபர்கள் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வந்து போதுமான தேவைகளை பூர்த்தி செய்யாததால் துபாய் விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர். அதனை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் வரும் பயணிகள் கண்டிப்பாக ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அதன்படி, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!