அமீரக செய்திகள்

மீண்டும் சாதித்த அமீரகம்.! 24 மணி நேர பயணத்திற்கு பின் ISS-ஐ சென்றடைந்த ‘சுல்தான் அல்நெயாதி’.. அரபி மொழியில் வாழ்த்து..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நீண்ட கால விண்வெளிப் பயண திட்ட கனவானது தற்பொழுது நனவாகியுள்ளது. அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுல்தான் அல்நெயதி தனது Crew-6 குழுவின் துணையுடன் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நிலையில்  அவர்கள் பத்திரமாக சர்வதேச விண்வெளி தளத்தை (ISS) அமீரக நேரப்படி சரியாக மார்ச் 3ம் தேதி காலை 10.40 மணிக்கு வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச்.2ம் தேதி கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சீறிப்பாய்ந்த டிராகன் எண்டெவர் விண்கலமானது சுற்றுப்பாதையை அடைய 24 மணிநேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது நீண்டகால விண்வெளி பயணத்திற்கு விண்வெளி வீரரை அனுப்பிய உலகின் 11வது நாடாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச விண்வெளி தளத்தில் இந்த SpaceX Crew-6 இன் வருகை நேரமானது திட்டமிட்டபடி அல்லாமல் சிறிது கால தாமதமாகியுள்ளது. இதற்கு காலை 9.43 மணியளவில் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பில் உள்ள 12 கொக்கிகளில் ஒன்றின் மைக்ரோ சென்சாரில் ஒரு எச்சரிக்கை வந்துள்ளது. அதில் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்ய இரண்டு மணி நேரம் கொடுக்கப்பட்ட நிலையில், தரைக் கட்டுப்பாட்டுக் குழு கைமுறை மென்பொருள் செயல்பாட்டின் (manual software override) மூலம் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10.54 மணியளவில், ஒரு கொக்கியில் ஏற்பட்ட பிரச்சினை முடிக்கப்பட்டதையடுத்து, ஹோஸ்டனில் (Houston) உள்ள தரைக்கட்டுப்பட்டுக் குழு அஹ்லான் வா சஹ்லான் (Ahlan Wa Sahlan- welcome) என்று வரவேற்றுள்ளது. இதனையடுத்து ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது ISS மிஷனில் பல தேசிய பங்கேற்பைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், சர்வதேச விண்வெளி தளத்தில் க்ரூ-6 உறுப்பினர்களை (அல்நேயாடி, மிஷன் கமாண்டர் ஸ்டீபன் போவன், நாசா பைலட் வாரன் ஹோபர்க் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ்) ஏற அனுமதிக்க நுழைவுகளைத் (hatches) திறக்கப்படுவதற்கு சுமார் 1.5 மணி நேரம் கசிவு சோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஒரு சிறிய வரவேற்பு விழாவைத் தொடர்ந்து ISS தளபதி ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் செர்ஜி ப்ரோகோபியேவ் பாதுகாப்பு விளக்கத்தை நடத்துவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. ISS-ல் Crew-6 உறுப்பினர்கள் சென்றடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் நீண்ட ஆறு மாத விண்வெளி பயணத்தின் முதல் நாளை கடந்துள்ளனர்.

இது மட்டுமல்லாது ஏற்கெனவே அமீரகத்தில் இருந்து இருமுறை விண்வெளி வீரர்கள் குறுகிய காலம் விண்வெளி பயணம் மேற்கொண்டது, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி வைத்தது உள்ளிட்ட விண்வெளி துறையில் பல்வேறு முயற்சிகளையும் அமீரகம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!