துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் உயிரிழப்பு!!
ஈரானின் எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு துருக்கியில் இன்று 5 .7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.பல பேர் கட்டிடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதாகவும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்துள்ளதாகவும் துருக்கி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமானது ( EMSC ) இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தைக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
துருக்கியின் பொது ஒளிபரப்பாளரான டிஆர்டி வேர்ல்ட், இந்த நிலநடுக்கம் துருக்கியில் சுமார் 43 கிராமங்களை பாதித்ததாகவும், இது சக்திவாய்ந்த பூகம்பங்களில் ஒன்றாகவும் கூறுகிறது.
துருக்கி மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய அளவிலான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாகும். கிழக்கு துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மற்றுமொரு நிலநடுக்கம் ஈரானில் ஏற்பட்டபோது கட்டிடங்களுக்கு எந்த விட சேதமும் இல்லாமல் கட்டமைப்பு சேதத்தை மட்டும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.