உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இந்தியாவில் திறந்து வைக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவிருக்கிறார். ட்ரம்ப்பின் வருகையை ஒட்டி இந்தியாவில் பலத்த ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் நேரடியாக குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார்.
பின் மனைவி மெலனியாவுடன் சபர்மதி ஆசிரமம் சென்று வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருட்களைப் பார்வையிடுகிறார். இதனையொட்டி விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை இலட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மொடேராவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்து அங்கு நடைபெறவிருக்கும் ” நமஸ்தே ட்ரம்ப் ” நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.
மொடேரா கிரிக்கெட் மைதானம்
அகமதாபாத்தில் இருக்கும் மொடேராவில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் 1982 ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 12 டெஸ்ட்போட்டிகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகள் இதுவரை நடந்துள்ளன. தற்பொழுது ஏற்கெனவே உள்ள மைதானத்தை இடித்து அங்கு பிரம்மாண்டமாக 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மைதானம் கடடப்பட்டுள்ளது.
இதுவே தற்பொழுது உலகின் மிகப்பெரிய மைதானம் ஆகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருக்கும் மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாக இருந்தது. இந்த மைதானத்தில் ஏறத்தாழ 1,00,024 பார்வையாளர்கள் அமரலாம். தற்பொழுது மொடேராவில் கட்டப்பட்டிருக்கும் மைதானத்தில் 1,10,000 பார்வையாளர்கள் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.