ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடவிருக்கும் அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் நடத்த திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான கண்கவர் வானவேடிக்கை காட்சிகள் மற்றும் கிளாசிக் கார் அணிவகுப்புகள் உட்பட தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஷார்ஜா தேசிய தின கொண்டாட்டக் குழு நவம்பர் 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கல்பா (Kalba), அல் படேஹ் (Al Bataeh) மற்றும் வாடி அல் ஹெலோ (Wadi Al Helo) ஆகிய இடங்களில் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு மகிழலாம். மேலும் இந்த கொண்டாட்டங்களில் பருந்து மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அடங்கும்.
ஷார்ஜாவின் கல்பா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தின கொண்டாட நிகழ்ச்சிகள் இன்று (நவம்பர் 26) நடைபெறவுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் மாலை 4 மணிக்கு தேசிய நாடக அரங்கேற்றத்துடன் தொடங்கும். மேலும் இன்று கல்பா நகரில் நடக்கவுள்ள கிளாசிக் கார் மற்றும் பைக் அணிவகுப்பு நகரம் முழுவதும் உள்ள வாகன ஆர்வலர்களை மகிழ்விக்கும். அத்துடன் பிரபல அமீரக பாடகர் பைசல் அல் ஜாசிமின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியுடன் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களை கவரும் வகையில் கண்கவர் வானவேடிக்கை காட்சியும் நடைபெறும்.
50 வது தேசிய தின கொண்டாட்டங்களின் அடுத்த நிகழ்வாக நவம்பர் 28 ம் தேதி அன்று, ஷார்ஜாவின் அல் படேஹ் பகுதியில் அமீரகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை காலை 9 முதல் 11 மணி வரை அல்ம்தாஃப் அசோசியேஷன் குழுவினர்கள் அரங்கேற்றவுள்ளனர். மேலும் இங்கு பெவிலியன்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பிரபலமான கலைப்பொருட்களை ஆராய்வதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் பார்வையாளர்கள் பெற முடியும்.
அடுத்ததாக நவம்பர் 29 அன்று வாடி அல் ஹெலோவில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பிரபலமான டிப்பா அல் ஹர்பியா இசைக்குழுவின் நிகழ்ச்சியுடன் தேசிய தின கொண்டாட்டங்கள் தொடங்கும். மேலும் இந்த நிகழ்வில் எமிராட்டிகள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் பருந்துகளை பார்வையாளர்கள் நெருக்கமாகப் பார்க்கலாம் என்பதும் கவனிக்கத்தக்கது.
