புதிய வருடம் 2022 ம் ஆண்டு தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் துபாயில் உள்ள உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் நடைபெறும் புத்தாண்டு வானவேடிக்கைக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
புர்ஜ் கலீஃபாவில் நடைபெறும் புத்தாண்டு வானவேடிக்கைகளை காண்பதற்கு மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் துபாய்க்கு வருகை தருவார்கள். அதேபோன்று துபாயில் வசிப்பவர்கள் மட்டுமில்லாது அமீரகத்தின் மற்ற எமிரேட்களிலிருந்தும் பல்லாயிரம் பேர் புத்தாண்டு இரவு அன்று இங்கு நடக்கும் வானவேடிக்கையை காண்பதற்க்கு அந்த பகுதிக்கு வருவார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அத்தனை சிறப்பு பெற்ற துபாயில், இந்த வருடம் புதிய ஆண்டை இன்னும் சிறப்பாக்க துபாய் முழுவதும் 29 இடங்களில் மொத்தம் 36 வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு வானவேடிக்கைகளில் துபாயில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் தவிர துபாய் நகரில் இருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல்களும் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக கண்கவர் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளது.
துபாய் முழுவதும் புத்தாண்டு வானவேடிக்கைகள் நடக்கவிருக்கும் முக்கிய இடங்கள் மற்றும் ஹோட்டல்களின் விபரங்களை கீழே காணலாம்.
- புர்ஜ் கலீஃபா (Burj Khalifa)
- எக்ஸ்போ 2020 துபாய் (Expo 2020 Dubai)
- புர்ஜ் அல் அரப் (Burj Al Arab)
- துபாய் ஃபிரேம் (Dubai Frame)
- குளோபல் வில்லேஜ் (Global Village)
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் (Dubai Festival City Mall)
- தி பாயின்ட் – பாம் ஜுமேரா (The Pointe – Palm Jumeirah)
- அட்லாண்டிஸ் தி பாம் – பாம் ஜுமேரா (Atlantis The Palm – Palm Jumeirah)
- அல் சீஃப் DSF மார்க்கெட் (DSF Market at Al Seef)
- எமிரேட்ஸ் கோல்ஃப் கிளப் (Emirates Golf Club)
- டவுன் சதுக்கம் (Town Square)
- பார்க் ஹயாட் துபாய் (Park Hyatt Dubai)
- லி ராயல் மெரிடியன் பீச் ரிசார்ட் & ஸ்பா (Le Royal Meridien Beach Resort & Spa)
- ஜெபல் அலி கோல்ஃப் & ரிசார்ட் (Jebel Ali Golf & Resort)
- ஃபோர் சீசன் ரிசார்ட் – ஜுமேரா (Four Seasons Resort – Jumeirah)
- பாப் அல் ஷம்ஸ் ஹோட்டல் (Bab Al Shams Hotel)
- அட்ரஸ் மான்ட்கோமெரி ஹோட்டல் (Address Montgomerie Hotel)
- பலாஸ்ஸோ வெர்சேஸ் – துபாய் (Palazzo Versace — Dubai)
- பல்கேரி ரிசார்ட் & ரெசிடென்சஸ் – துபாய் (Bvlgari Resort & Residences – Dubai)
- ஷாமா டவுன் சதுக்கம் துபாய் (Nshama Town Square Dubai)
- நிக்கி பீச் ரிசார்ட் & ஸ்பா (Nikki Beach Resort & Spa)
- ஒன் & ஒன்லி ராயல் மிராஜ் (One & Only Royal Mirage)
- ஜுமேரா சபீல் சராய் ஹோட்டல் (Jumeirah Zabeel Saray Hotel)
- ஒன் & ஒன்லி தி பாம் ஜுமேரா (One & Only The Palm Jumeirah)
- சோஃபிடெல் தி பாம் ஜுமேரா (Sofitel The Palm Jumeirah)
- ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் (Jumeirah Golf Estates)
- விஸ்டா மேர் – தி பாம் (Vista Mare – The Palm)
- பாம் பீச் – தி பாம் (Palm Beach, The Palm)
இதில் எக்ஸ்போ 2020 துபாயில் நள்ளிரவு 12 மணிக்கும் அடுத்ததாக அதிகாலை 3 மணிக்கும் என இரண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குளோபல் வில்லேஜில் மொத்தம் ஏழு வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சியானது அமீரகத்தின் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கும், அது தவிர மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து கொண்டாடும் விதத்தில் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் புத்தாண்டு தொடங்கும் நேரத்தின் அடிப்படையில் இங்கும் வானவேடிக்கை நடத்தப்படவுள்ளது.
அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக துபாயில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியத் தவறினால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.