ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசனை நிறுவனமான கூப்பர் ஃபிட்ச் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, எக்ஸ்போ 2020, FIFA உலகக் கோப்பை மற்றும் பல துறைகளின் நேர்மறையான தாக்கத்தினால், 2022 இல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு முழுவதுமாக மீண்டு தொழிலாளர்களுக்கு சராசரியாக மூன்று சதவீதம் சம்பளம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 41 சதவீத நிறுவனங்கள் ஆலோசனை, மனித வளம், உற்பத்தி, தொழில்நுட்பம், மூலோபாயம் மற்றும் பொதுத் துறைகள் ஆகியவற்றுடன் 10 சதவீதம் வரை சம்பளத்தை அதிகரித்துள்ளதாக இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
2022 இல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 43 சதவீத வணிகங்கள் சம்பளத்தை அதிகரிக்கும் என்றும் 35 சதவீத வணிகங்கள் சம்பளத்தை 0-5 சதவீதம் அதிகரிக்கும், நான்கு சதவிகித வணிகங்கள் சம்பளத்தை 6-9 சதவிகிதம் அதிகரிக்கும்; மற்றும் ஐந்து சதவீத வணிகங்கள் 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் சம்பளத்தை உயர்த்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் நிறுவனங்களில் சுமார் 37 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றத் திட்டமிடவில்லை என்றும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, 19 சதவீதம் பேர் 2022ல் சம்பளத்தை 10 சதவீதம் வரை குறைக்கப் போவதாக கூறியிருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இது பற்றி கூப்பர் ஃபிட்சின் நிறுவனர் மற்றும் CEO ட்ரெஃபோர் மர்பி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் 2020-ல் தொற்றுநோயால் எதிர்கொண்ட சவால்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு சந்தை கணிசமாக மீண்டு வருவதைக் கண்டோம். 2022-ஐ தொடர்ச்சியான வளர்ச்சியின் ஆண்டாகப் பார்க்கிறோம். எக்ஸ்போ 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடரும் மற்றும் கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பையின் காரணமாக துபாய் ஒரு முக்கிய சுற்றுலா போக்குவரத்து மற்றும் வணிக மையமாக இருப்பதால் பல சந்தைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
போனஸ்
அமீரக நிறுவனங்களில் 63 சதவிகிதம் 2021 ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே போனஸை வழங்கியதாக கூறியுள்ளது. இது 2020 இல் நிலவிய 44 சதவிகிதத்திலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான போனஸ் திட்டங்களைச் செலுத்தத் திட்டமிடுகிறீர்களா என்று நிறுவனங்களிடம் கேட்கப்பட்டதில், மேலும் பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் போனஸை வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர். 46 சதவீதம் பேர் 1-2 மாத மொத்த சம்பளம் மற்றும் 21 சதவிகிதம் பேர் 3-5 மாத மொத்த சம்பளம் வழங்கவுள்ளனர். சுமார் 26 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு போனஸ் கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
வேலை வாய்ப்பு
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், 2021 ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு மற்றும் வளர்ச்சியின் ஆண்டாக உள்ளது. இந்த வளர்ச்சி வேலை சந்தையிலும் பிரதிபலிக்கிறது என்று மர்பி கூறியிருக்கிறார்.
கூப்பர் ஃபிட்ச் கணக்கெடுப்பின்படி, 30 சதவீத நிறுவனங்கள் 2021ல் தங்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. 52 சதவீதத்தினர் இந்த ஆண்டு தங்கள் நிறுவன தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை மற்றும் 18 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், 23 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், அதேசமயம் 59 சதவீதம் பேர் தங்கள் எண்ணிக்கையை 10 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.