லைஃப் ஸ்டைல்

எக்ஸ்போ துபாய்: இரண்டு வான வேடிக்கைகளுடன் 13 மணி நேரமாக நடத்தப்படவிருக்கும் பிரம்மாண்ட புத்தாண்டு கொண்டாட்டம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக பிரம்மாண்டமாக நிகழ்த்தப்பட உள்ள நிலையில், எக்ஸ்போ 2020 துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31 ம் தேதி மாலை 3 மணி முதலே தொடங்கி விடும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாலை துவங்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளானது ஜனவரி 1, 2022 அன்று அதிகாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்களில் இரண்டு வான வேடிக்கை நிகழ்வுகள், DJ இசை நிகழ்ச்சிகள், மற்றும் அல் வாஸ்ல் பிளாசாவில் நள்ளிரவு ‘Ball Drop’ ஆகிய நிகழ்வுகள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்போவில் நடைபெறும் இந்த கோலாகலமான புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

13 மணிநேரமாக நடைபெறவிருக்கும் விழாக்களில் புத்தாண்டு துவங்கும் நள்ளிரவு மற்றும் அதிகாலை 3 மணிக்கு என இரண்டு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்றும், துபாய் மெட்ரோ புத்தாண்டு கொண்டாட்டங்களின் நேரம் முழுவதும் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி எக்ஸ்போ 2020 துபாயின் தலைமை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அதிகாரி தாரேக் கோஷே கூறுகையில், “உலகின் ஒவ்வொரு நாட்டாலும் கொண்டாடப்படும் புத்தாண்டு ஒரு தனித்துவமான தருணம். அரபு உலகில் இதுவரை நடைபெறாத மிகப்பெரிய நிகழ்வாக, 182 நாட்களில் 192 நாடுகளின் பெவிலியன்களையும் பாதுகாப்பாக நாங்கள் தொகுத்து வழங்கி வருவதால், 2022 ஆம் ஆண்டை திறந்த கரங்களுடனும், பிரகாசமான எதிர்காலத்திற்கான புது நம்பிக்கையுடனும் வரவேற்கும் வகையில், உயர்தர பொழுதுபோக்கு மற்றும் செயல்பாடுகளின் கண்கவர் கொண்டாட்டத்தை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பார்ககையில் முதன்முதலாக நடைபெறும் மிகப்பெரிய உலகளாவிய நிகழ்வான எக்ஸ்போவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஆன்-சைட் PCR சோதனை மையங்களின் எண்ணிக்கையை நான்காக விரிவுபடுத்துதல் மற்றும் அனைத்து நாட்டு பெவிலியன் ஊழியர்களுக்கும் இலவச சோதனை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

அத்துடன் அனைத்து முன்னணி பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், அணிவகுப்புகள் (parade) மற்றும் ரோவிங் பொழுதுபோக்கு (roving entertainment) போன்ற சில நிகழ்வுகள் குறுகிய கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள நிலையில், எக்ஸ்போ 2020 துபாய்க்கு அனைத்து எக்ஸ்போ மற்றும் சர்வதேச பங்கேற்பாளர் ஊழியர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல் எக்ஸ்போவிற்கு வரும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் தடுப்பூசி அல்லது எக்ஸ்போ வருவதற்கு முந்தைய 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!